காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு தீவிர அழுத்தத்தை தந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று திறந்து வைக்கப்பட்ட பிராந்திய கவுன்சிலர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமது காணாமல் போன உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தமிழ் மக்கள் கேட்ட வண்ணமே உள்ளனர்.
இதன் உச்ச கட்டமாகவே, கடந்த சில தினங்களாக வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டம் தற்சமயம் கைவிடப்பட்டாலும் அது தற்காலிக தீர்மானமே என்று கூறப்படுகிறது.
இந்த போராட்டத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவேண்டும்.இதில் கலந்துகொண்ட யாராவது ஒருவர் உண்ணா விரதத்தால் இறந்தால் அது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பில் ஒரு செயலகத்தையும் ஒரு விசேட சட்டத்தையும் அரசாங்கம் உருவாக்கினாலும் அவை இன்னும் செயல் வடிவம் பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா,சம்பந்தன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.