மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக பலர் ஊடுருவுவதை தடுக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார். வெற்றி பெற்று தற்போது அமெரிக்க அதிபராகி உள்ள நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
அதற்கான தொகை மெக்சிகோவிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்க மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ மறுத்து விட்டார்.
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அந்த தொகையை வழங்க மெக்சிகோ மறுத்த நிலையில் அதனிடம் இருந்தே வேறு விதமாக வசூலிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் எல்லை சுவர் கட்ட ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் பணத்தை மிக எளிதாக வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெள்ளை மாளிகை பத்திரிகை துறை மந்திரி சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார். பிலாடெல்பியாவில் இருந்து வாஷிங்டனுக்கு அதிபர் டிரம்புடன் பயணம் செய்தபோது இத்தகவலை அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் கூறும் போது, 160 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இது போன்று இறக்குமதி வரி விதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், முதலில் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.