எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.