ஆப்பிரிக்க நாடான காம்பியா இங்கிலாந்திடம் இருந்து 1965-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதை தொடர்ந்து நடந்த சர்வாதி கார ஆட்சியாளரிடம் இருந்து 1994-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சி பறிக்கப்பட்டது.
யாகியா ஜம்மே அதிபராக பதவி ஏற்றார். கடந்த 22 ஆண்டுகளாக அவர் பதவி வகித்தார். இவரது கொடூரமான ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டனர்.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் அதிபர் யாகியா ஜம்மே படுதோல்வி அடைந்தார். அத்மா பாரோ அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை அதிபர் யாகியா ஏற்கவில்லை.
மேலும் பதவி விலகவும் அவர் மறுத்துவிட்டார். எனவே மக்கள் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அண்டை நாடான செனேகல் சென்ற அத்மா பாரோ அங்குள்ள காம்பியா நாட்டு தூதரகத்தில் அதிபராக பதவி ஏற்றார்.
இதற்கிடையே மக்கள் போராட்டத்துக்கு பணிந்த யாகியா பதவியில் இருந்து விலகினார். மேலும் காம்பியாவில் இருந்து வெளியேறவும் சம்மதித்தார்.
அதை தொடர்ந்து அவர் அண்டை நாடான கினியாவுக்கு தனது மனைவியுடன் விமானத்தில் புறப்பட்டு சென்றார். ஆகவே செனேகல் நாட்டில் இருக்கும் புதிய அதிபர் அத்மா பாரோ விரைவில் காம்பியா திரும்புகிறார்.