க.கிஷாந்தன்
மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை இப்பகுதி கிராம சேவகர் ஒருவர் கண்டுக்கொள்வதில்லை என எதிர்ப்பு தெரிவித்து 22.01.2017 அன்று நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இப்பகுதி பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலை பகுதியில் பருவகால நிகழ்வின் போது வருகை தரும் வெளியார்கள் பொது இடங்கள் மற்றும் அரச காணிகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர் என பொதுமக்கள் தெரிவிக்கும் அதேவேளை இந்த காணி ஆக்கிரமிப்புக்கு இப்பகுதியை சேர்ந்த கிராம சேவக அதிகாரி ஒருவர் வெளியார்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் இப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல்வேறுப்பட்ட முறைபாடுகளை செய்துள்ள போதிலும் நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை நல்லதண்ணி பிரதேசத்தில் காணப்படும் அரச காணிகள் மற்றும் பொது இடங்களில் வெளியார்கள் ஆக்கிரமிக்கும் இடங்களில் உள்ளுர் அரச அதிகாரிகள் ஏதாயினும் ஒரு வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க இடங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அவ் இடங்கள் தமக்கு சொந்தம் என வெளியிடவாசிகள் தெரிவிக்கின்றனர் எனவும் இவ் இடங்கள் வெளியிடவாசிகளுக்கு எந்த ரீதியில் உரிமைக்கொள்ள முடிகின்றது எனவும் தெரியாமல் இருப்பதாக பொதுமக்களும் சில திணைக்கள அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை வெளியிடவாசிகளால் கைப்பற்றப்படுகின்ற இடங்கள் தொடர்பில் இப்பகுதி கிராம சேவக அதிகாரிக்கே நன்கு தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் இவ்வாறாக கைப்பற்றப்படுகின்ற இடங்கள் தொடர்பில் கிராம அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஆர்ப்பாட்டகாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே இப்பகுதி மக்களுக்கு சொந்தமான பொது இடங்களை வெளியார்க்கு விற்பனை செய்கின்றனரா ? இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறாக செயல்படும் கிராம அதிகாரி எமது பிரதேசத்திற்கு வேண்டாம் எனவும் கோஷமிட்டு பதாதைகளை ஏந்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இப்பிரதேச மக்கள் முன்னெடுத்தனர்.