நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடம்: ஜனாதிபதி தெரிவிப்பு

க.கிஷாந்தன்

 

நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதனையடுத்து மொனராகலை மாவட்டம் இருப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும் குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் 21.01.2017 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் தேயிலை, மரக்கறி, பழவகைகள் ஆகிய உற்பத்திகளினால் தேசிய ஆதாயத்தில் வருமானம் கிடைக்கின்றது. அதில் தேயிலை முதலிடம் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோஷணத்தினால் இங்குள்ள மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அறிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த மாவட்டத்தில் மந்தபோஷணத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

அதேவேளையில் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளிலும் விசேட கவனம் செலுத்தப்படும். இன்று தலவாக்கலைக்கு ஹெலிகொப்டரில் பயணித்த நான் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை பிரதேசத்தில் இறங்க நேரிட்டது.

 

இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சிறார்கள், பொது மக்கள் போன்றோர்களை சந்திக்கவும் நேரிட்டது. இதன்போது அவர்களிடம் அவர்களின் குறைபாடுகள், எதிர்பார்ப்புகள் என்னவென்பதை அறிந்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

 

இந்தநிலையில் கொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு மலசலகூட வசதிகள் உள்ளிட்ட குடிதண்ணிர் பிரச்சினைகள் வைத்தியசாலைக்கு போக்குவரத்துக்கென அம்புலன்ஸ் வண்டி பிரச்சினைகள் என பல குறைபாடுகளை இம்மக்கள் அனுபவிப்பது தொடர்பில் என்னிடம் குறைபாடுகளை தெரிவித்தனர்.

 

இதனடிப்படையில் கொட்டகலை பிரதேச பாடசாலை ஒன்றில் மலசலகூடங்களை திருத்தம் செய்து தருவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல் அம்புலன்ஸ் வண்டி சேவையை துரிதப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் காணப்படும் இவ்வாறான குறைபாடுகளையும் கண்டறிந்து அமைச்சிகளின் ஊடாக நடவடிக்கைகளை எடுக்கப்பபோவதாகவும், இப்பிரதேசத்தில் இளம் தலைவரான நவீன் திஸாநாயக்க அவர்களுக்கு பூரண ஆதரவை வழங்கி இங்கு காணப்படும் மேலதிக பிரச்சினைகள் தொடர்பிலும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பிலும் ஆக்கபூர்வமாக தீர்வினை எட்டுவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி நவீன் திஸநாயக்காவின் குடும்ப உறவினை சுட்டிக்காட்டி இதன்போது தெரிவித்தார்.

 

தேயிலை ஆராய்ச்சி நிலையம் அதிக சக்தி உடன் அதன் சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இங்கு பல ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் அற்ற ரீதியில் இருப்பதாக என்னிடம் முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பில் இதற்கு பொறுப்பான அமைச்சராகிய நவீன் திஸாநாயக்க அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். வெகுவிரைவில் இங்குள்ள ஊழியர்கள் பலர் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவர்.

 

நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இயற்கை வளங்கள் நாசமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நமது நாட்டிற்கு வளங்களை தரக்கூடிய வனவளங்களை பாதுகாக்க கூடியவாறு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

 

இதற்கென வனவளங்களை பாதுகாப்பது தொடர்பில் வெகுவிரைவில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நுவரெலியா மாவட்ட மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது அதிகூடிய வாக்குகளை அளித்து என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள். அவர்களுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இன்னும் பல வகைகளில் முற்றாக பாதிக்கப்பட்டு வருகின்ற இந்த மாவட்டத்தின் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் சுபீட்சம் ஏற்படும் அளவிற்கு அபிவிருத்தி பணிகளை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

தேசிய வருமானத்தை ஈட்டி தரும் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்களுக்கு சக்தி அளிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் இவைகள் சிறந்த முறையில் அபிவிருத்திகள் செய்யப்படும் எனவும் தெரிவித்த அவர் தேயிலை ஆராயச்சி நிலையத்தின் சேவைகள் மென்மேலும் உயர சேவையாளர்களையும் அதிகாரிகளையும் ஊக்குவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த வைபவத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.