கிழக்கின் எழுச்சி ஸ்தாபகர் அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல்
அரசியன்: மிக ஆக்ரோசமாக ஆரம்பித்த கிழக்கின் எழுச்சி தற்போது மந்தமாகி விட்டதாக பரவலாக கூறப்படுவது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: கிழக்கின் எழுச்சியின் முதற்கட்ட நடவடிக்கை உறக்க நிலையிலிருந்த கிழக்கு முஸ்லிம்களை விழிப்பூட்டுவதாய் அமைந்திருந்தது.
ஆக்ரோசமான முறையிலேயே அதை செய்யவேண்டியிருந்தது.
அடுத்த கட்டமான அறிவூட்டலை மிகக்காத்திரமான முறையில் நிதானமாய் செய்து கொண்டிருக்கிறோம்.
முகநூல், ஊடகங்களுக்கு அப்பால் எமது நோக்கங்கள்,கொள்கைகளை சமூகத்தின் சிந்தனாவாதிகளிடம் சேர்ப்பிக்கும் பணியை செய்து கொண்டு இருக்கின்றோம்.
அதாவது, விழிப்பூட்டலுக்கும் அறிவூட்டலுக்கும் இடையான வேறுபாடே மக்களுக்கு ஒரு மந்தப்போக்குமாதிரியான தோற்றத்தை கொடுக்கின்றது.
கிழக்கின் எழுச்சி தெளிவான திட்டங்களுடன் செயல்படும் அமைப்பு.
வெளித்தோற்றத்தில் சில்வேளை வேகமாயும் சிலவேளை மந்தமாயும் தென்பட்டாலும் அவை தேவைக்கேற்ற அசைவுகளே.
அரசியன்: முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கிழக்கை சேர்ந்ததாய் இருக்கவேண்டும் என்ற உங்கள் கோரிக்கைக்கு என்னவாயிற்று?
அந்தக்கோசத்தின் ஆக்ரோசம் குறைந்துவிட்டது போல் தெரிகிறதே?
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலிக்கு தே.பட்டியல் வாக்களிக்கப்பட்டதுடன் கிழக்குத்தலைமை கோசம் ஒடுங்கிவிட்டதாயும் ஹஸன் அலிக்கு தே.பட்டியல் பெறுவதுவே கிழக்கின் எழுச்சியின் நோக்கமாய் இருந்ததாயும் ஒரு கருத்து பரவலாய் இருக்கின்றதே. இதுபற்றி உங்கள் கருதூது யாது?
பதில்: மு.காவின் தலைமை கிழக்கைச்சேர்தததாய் இருக்கவேண்டும் என்பது கிழக்கின் எழுச்சியின் அடிப்படை இலக்கு.
அந்த இலக்குலிருந்து நாம் வழுவினால் கிழக்கின் எழுச்சியென்பதற்கே ஏதுமில்லை.
ஆனால் இந்த இலக்கை வெறும் கோசங்களினால் மட்டும் அடைந்திட முடியாது. பலவகையான சாத்தியப்பாடுகளுடைய சாதுர்யமான நகர்வுகளூடாகவே அடையலாம். அத்தகைய நகர்வுகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.
எந்தக்கட்டத்திலும் நாம் அந்த நிலைப்பாட்டிலிருந்தும் விலகவில்லை என்பதே உண்மை.
ஹஸன் அலியின் தேசியப்பட்டியல் விவகாரத்தில் எமக்கு எந்த கரிசரனையும் என்றும் இருந்ததில்லை. ஆனால் அவருடைய செயலாளர் அதிகாரம் பூரணமாக திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியே வந்துள்ளோம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்.
ஹஸன் அலிக்கான செயலாளர் அதிகாரம் என்பது கிழக்கின் எழுச்சியை பொறுத்தவரை கட்சிக்குள் இருக்கவேண்டிய ஆகக்குறைந்தளவான கிழக்குக்கான அதிகாரமாகவே நாம் கருதுகின்றோம்.
என்றாலும் ஹஸனலிக்கு தேசிப்பட்டியல் கிடைப்பதை தற்கால அரசியல்நிலை காரணமாக நாம் வரவேற்கிறோம்.
ஏனெனில், அரசியலமைப்பு மாற்றம், அதனுடன் தொடர்புடைய தேர்தல் சட்டத்திருத்தங்கள் போன்ற விடயங்களிலும் கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை சாத்தியப்படுத்துவதிலும் ஹஸன் அலியால் பாரிய பங்களிப்பு செய்யலாம் என நம்புகிறோம்.
எதுவாகினும் இப்போது தே.பட்டியல் உறுப்பினராய் இருக்கும் சல்மான் அவர்கள் இராஜினாமா செய்வதிலும் ஹகீம் இந்நியமணத்தை செய்வார் என்பதிலும் என்க்கு ஒருவீதமேனும் நம்பிக்கையில்லை.
நாமே நம்பாத விடயங்களால் எமது செயல்பாடுகள் தீர்மானிக்கப்படுவதாக எவரும் கருதினால் அது அவர்களின் அறியாமையின் எடுகோலேயன்றி வேறேதாக இருக்க முடியும்.
அரசியன்: அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் கொடுப்பது விடையத்தில் கிழக்கின் எழுச்சியின் நிலைப்பாடு என்ன?
அப்படி கொடுப்பதாயின் யாருக்கு கொடுத்தால் பொருத்தம் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: அட்டாளைச்சேனைக்கான தே.பட்டியல் விடையத்தில் எமது நிலைப்பாடு தீர்க்கமானதே. கட்டாயமாக அவ்வூருக்கு வாக்களிக்கப்பட்ட தே.பட்டியல் கொடுக்கப்படவேண்டும்.
யாருக்கு கொடுத்தால் பொருத்தம் என்பதில் எமக்கு ஒரு தெரிவுண்டு. ஆனால் குறிப்பிட்டு நாம் அடையாளம் காட்டினால் நிட்சயமாய் அவருக்கு கொடுபடமாட்டாது. ஆகவே எமது தெரிவை நாம் வெளிப்படுத்த விரும்பவில்லை. சிலவேளை இவ்விடயத்தில் முடிவெடுக்கும் நிலைக்கு கிழக்கின் எழுச்சி வருமாயின் எமது தெரிவை நியமிப்போம்.
அரசியன்: அண்மையில் பாராளுமன்றத்தில் இராஞாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையை நீங்கள் வரவேற்றிருந்தீர்கள் செயலாளர் அஸ்ஸுஹூர் முரன்பாடான கருத்தை வெளியிட்டு இருந்தது கிழக்கின் எழுச்சிக்குள் இருக்கும் உள்ளக முரன்பாடாய் சிலர் சித்தரிக்கின்றார்களே. இது விடயத்தில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: இதில் முரன்பாடு ஏதுமில்லை
முஸ்லிம் காங்கிரஸ் செய்யத்தவறியதை ஹிஸ்புல்லாஹ் செய்ததற்காய் நான் பாராட்டியிருந்தேன்.
ஹிஸ்புல்லாஹ்வின் உரையை மெச்சுவளவுக்கு சமூகம் முஸ்லிம் காங்கிரஸால் கைவிடப்பட்டுள்ளதை அஸ்ஸுஹூர் சுட்டிக்காட்டும் வகையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதில் முரன்பாடு என்று ஏதுமில்லை. இருவரின் நோக்குதலுக்குமிடையிலுள்ள வித்தியாசங்களே.
என்னைப்போலவே அஸ்ஸுஹூரும் சிந்திக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
அடிப்படை நோக்கங்களிலும் கொள்கைகளும் ஒத்த நிலைப்பாட்டில் இருப்பதே நிபந்தனைக்குரியது மற்றைய விடயங்களில் மாற்றுக்கருத்தக்களை கொண்டிருப்பதை முரண்பாடுகளாய் பார்க்கத்தேவையில்லை.
மேலும், அஸ்ஸுஹூர் சுதந்திரமாக சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு சிறந்த ஆளுமை. அதனால்தான் அவரை கிழக்கின் எழுச்சியின் இணைத்தலைவராய் ஆக்கினோம்.
இவ்விடையமாய் நாமும் கலந்துரையாடினோம். இருவரின் நியாயங்களையும் இருவரும் ஏற்றுக்கொண்டோம்.
அடிப்படை கொள்கைகளில் உடன்பாடிருந்தால் மற்றவை புறக்கணிக்க கூடியவைகளே.
இஸ்லாமிய வரலாற்றிலும் மாற்றுக்கருத்துக்கள் தடைசெய்யப்படவில்லை என்பதை பல சம்பவங்களூடாக நாம் அறியலாம். ஆனால் அவை அடிப்படைக்கு முரன்படாதவையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
அரசியன்: கிழக்கின் எழுச்சியின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
பதில்: இப்போதைக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு நேர்மையான ஒரு தலைமைத்துவ சபை உருவாக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு எமது முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். அதற்கு பங்களிக்ககூடியவர்களுடன் கலந்துரையாடல்களை செய்கின்றோம், தவிரவும் இன்னும் சில இப்போதைக்கு வெளியிடமுடியாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்
அரசியன்: வெளியாகியுள்ள தாருஸ்ஸலாம் பற்றிய நூலில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை தருவதுடன் மு.காவின் ஸ்தாப பொருலாரராக இருந்து நான் முகம் கொடுத்த சிரமங்களை எண்ணிப்பார்க்கையில் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
அந்த நூலில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்ச்சிகளையும் செய்து வருகிறோம். குறுகிய காலத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறும் என்பதை மட்டும் நிட்சயமாய் கூறலாம்