முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யவேண்டாமென பலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு தற்போது ஓய்வு பெற்றுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு தனது அறிக்கையை இம்மாத இறுதியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் கையளிக்க தயாராகவுள்ள நிலையிலே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காகவே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யவேண்டியுள்ளது என அரசாங்கம் அதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமித்துள்ள நிலையில் தற்போது ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இதேவேளை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், குர்ஆன் மற்றும் ஹதீஸை முன்னிறுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்ளைச் செய்வதிலிருந்தும் உலமாசபையை தவிர்த்து கொள்ளும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையை கவனத்திற்கொண்டே அமைச்சரவை உபகுழு தமது சிபாரிசுகளை தயாரிக்கும் என முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவுக்கு முரணான எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளவேண்டாமெனவும் திருத்தங்கள் ஷரீஆவுக்கு உட்பட்டதாகவே அமையவேண்டும் எனவும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத்தாரின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்றும் குழுத்தலைவர் சலீம் மர்சூபிடம் கையளிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
கையொப்பங்களுடன் கூடிய மகஜரின் பிரதிகள் குழுவின் அங்கத்தவர்கள் 18 பேரிடமும் கையளிக்கப்படவுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்து வேட்டை கொழும்பு மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் இது தொடர்பில் தெளிவுபடுத்தி பள்ளிவாசல்களுக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. கடிதத்தில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறும், விழிப்புணர்வூட்டும்படியும் வேண்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தின் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 1990ஆம் ஆண்டு டாக்டர் சஹாஸ்தீன் கமிஷன் 1972ஆம் ஆண்டு பாரூக் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு அக்குழுக்கள் சிபாரிசுகளை முன்வைத்தபோதும் தற்போது அமுலிலுள்ள தனியார் சட்டம் திருத்தப்படத் தேவையில்லை என்று நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையிலே 2009ஆம் ஆண்டு சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.அஸ்லிம் பின்வருமாறு தெரிவித்தார்.
சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு ஷரீஆவுக்கு அப்பால் சில திருத்தங்களை முன்வைக்குமென சந்தேகிக்கின்றோம். குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாகவும், விவாகப் பதிவாளர்களாகவும் நியமனம், விவாகப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் அவசியம். போன்ற விடயங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றோம்.
அதனாலேயே தற்போதைக்கு தனியார் சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை. திருத்தங்கள் அத்தியாவசியமென்றால் அவை ஷரீஆவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என வேண்டியுள்ளோம்.
மக்கள் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படத்தேவையில்லை என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் கையொப்பங்களை பதிவதில் காட்டும் அக்கறை இதனை உறுதி செய்கிறது என்றார்.