பிரித்தானியாவில் அதி உயர் எச்சரிக்கை !!

பிரித்தானியாவில் அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் கிழக்கு கரையோரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதி உயர் எச்சரிக்கையே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இன்று இரவு 12.30 GMT மணியளவில் இந்த இயற்கை அனர்த்தம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்காண குடியிருப்புக்கள் சேதமடையும் என கூறப்பட்டுள்ளது.

பலத்த சூறாவளியுடன், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் வரையிலான அலைகள் எழும்பும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜேவிக், எசெக்ஸ், கிரேற் யாமவுத் மற்றும் நோபோக் போன்ற பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளி ஏற்படுவதற்கு முன்னர் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும், அதிகளவான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.