நபி முஹம்மது (ஸல்) அவர்களை, கொலை செய்ய, குறைஷிகள் தீர்மானித்தனர். நள்ளிரவில் நபிகளார் தமது வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பள்ளி வாசலுக்குச் செல்லும் போது குறைஷிகள் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்து விழித்திருந்தனர்.
குறைஷிகள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்த்திருந்தாலும் அவர்கள் கண்முன்னே நபி முஹம்மது (ஸல்) அவர்களது வீட்டிலிருந்து வெளியே கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து, தரையிலிருந்து ஒரு கையளவு மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களது தலையில் தூவிவிட்டுச் சென்றார்கள். நபிகளாருக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி எதிரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான். இச்சம்பவம் திருக்குர்ஆனில் ஸூரத்து யாஸீனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரம் செல்லச் செல்ல, குறைஷிகளுக்கு எங்கோ ஏதோ தவறு நடந்துள்ளது என்று தெரிந்தது. தமது திட்டம் நிறைவேறவில்லை என்று புரிந்துக் கொண்டவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் நபிகளாரின் வீட்டிற்கு முன்பு கூடியிருந்ததைக் கவனித்த ஒருவர், “நீங்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களையா தேடுகிறீர்? இப்போதுதான் முஹம்மது (ஸல்) உங்களைக் கடந்து சென்று, உங்களது தலையில் மண்ணைத் தூவி விட்டுச் சென்றாரே” என்றார்.
தலையில் மண்ணைத் தட்டிவிட்டவர்களாகக் கோபத்தில் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு முன் நம்பிக்கை இல்லாமல் நபிகளாரின் வீட்டுக் கதவின் இடைவெளியில் வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரைப் பார்த்து “அந்த நபர் தவறாகச் சொல்கிறார், முஹம்மது இங்குதான் தூங்குகிறார்” என்று கூறி, அங்கேயே வெளியில் விடியும்வரை காத்து நின்றனர்.
காலையில் போர்வைக்குளிருந்து அலீ (ரலி) எழுந்து வெளியே வந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து நபிகளாரைப் பற்றி அலீ (ரலி) அவர்களிடம் விசாரிக்க. தமக்கு எதுவுமே தெரியாது என்று அலீ (ரலி) மறுத்துவிட்டார்கள்.
இதற்கிடையில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அவர்களது தோழர் அபூ பக்கர் (ரலி) விடிவதற்கு முன்பே மக்காவை விட்டுப் புறப்பட்டிருந்தார்கள். குறைஷிகள் தங்களைத் தேடுவார்கள், அதனால் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்லும் வழக்கமான பாதையில் செல்லாமல், அந்தப் பாதைக்கு முற்றிலும் எதிரான திசையில் யமன் நாட்டை நோக்கிச் செல்லும் தெற்கு திசை பாதையில் பயணித்து வழியில் ‘தவ்ர்’ மலைக்குகையை அடைந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் செல்லும் இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக, மறுமலர்ச்சியாக அமைந்த சம்பவம். இதனையே ‘ஹிஜ்ரத்’ என்பர். இந்த நிகழ்வுதான் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கக் காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் மாறியது.
திருக்குர்ஆன் 36:9, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்