கடன் சுமையில் மூழ்கியிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

ஹம்பாந்தோட்டையில் சீன நிறுவனம் முதலீடு செய்யவில்லை என்றால், தேவையான பணத்தை திரட்ட வரி அறவிடும் வீதத்தை அதிகரிக்க நேரிடும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நிறுவனம் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்திற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது.

இது கைவிட்டு போனால், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை நாட்டு மக்களிடம் இருந்து சம்பாதிக்க நேரிடும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது ஒரு தொழிற்சாலையை கூட ஆரம்பிக்க முடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆரம்பித்து வைத்த 300 ஆடைத் தொழிற்சாலைகளில் 150 தொழிற்சாலைகளை மகிந்த ஆட்சிக்காலத்தில் மூடப்பட்டன.

கடும் கடன் சுமையில் மூழ்கியிருக்கும் இலங்கையை அதில் இருந்து மீட்க வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

எனினும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கண்டிக்கான இந்திய துணைத் தூதுவர் ராதா வெங்கடராமனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.