சிரியாவில் இன்று நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 43 பேர் பலி!

உள்நாட்டுச் சண்டை காரணமாக உருக்குலைந்துள்ள சிரியாவில் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இன்னும் சில பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஒழிக்க, அரசு வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக அலெப்போவில் உக்கிரமான தாக்குதல் நடைபெறுகிறது. இதில், கிளர்ச்சியாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் பலியாகின்றனர். இதுஒருபுறமிருக்க, தீவிரவாதிகள் நடத்தி வரும் வெடிகுண்டு தாக்குதல்களிலும் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. 

அவ்வகையில், துருக்கி எல்லையோரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அஜாஸ் நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. டேங்கர் லாரியில் வெடிபொருளை நிரப்பி, அதை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் வெடிக்கச் செய்துள்ளனர். இதனால், அப்பகுதி முற்றிலும் சின்னாபின்னமாக சிதைந்தது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் சிக்கிய பொதுமக்கள் பலர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். 

இந்த தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ரஷியா, துருக்கி ஆதரவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.