காடும் இல்லா முக்காடுகள்..(வில்பத்து)


காடும் இல்லா முக்காடுகள்..

Mohamed Nizous

ஓடு என்று விரட்டினார் அன்று
காடு என்று மிரட்டுகிறார் இன்று
ஆட்கள் மாறினாலும்
அநியாயம் மாறவில்லை.

வீடு இருந்த இடத்தில்
வேப்ப மரம் முளைத்ததனால்
பாடு பட்ட நிலத்தில்
பற்றைக் காடு வளர்ந்ததனால்
அனந்தரச் சொத்து நிலம்
வனாந்திரமாய் மாறிடுமோ?

பிள்ளைகள் தவழ்ந்து வாழ்ந்த
பிறந்த மண்ணைப் பறி கொடுத்து
முள்ளு மரம் வளர்ப்பதற்கா
அள்ளி வாக்களித்தோம்?

அகதியாய் குடியிருந்து
சகதியான வாழ்க்கையிலே
திகதிகள் மட்டுமே
தினம் தினம் மாறின.
மிகுதியாய் உள்ள வாழ்வும்
அகதியாய் அலைவதற்கா
காடு என்று பயமுறுத்தி
ஓடு என்று சொல்கின்றார்.

காட்டை அழிக்கவில்லை
காணி பிடிக்கவில்லை
போட்டு விட்டுப் போனபின்னால்
புதைந்து சிதைந்து போன
வீட்டைத் தேடுகிறார்
விஷ முள்ளுப் பற்றைக்குள்ளே.

முக்காடு வாழ்வதற்கு
இக்காடும் இல்லையாகி
திக்கு முக்காடுவோர்க்கு
தீர்வொன்று வருவதெப்போ?