யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை அமைச்சர் சுவாமினாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அதிகளவு தொடர்புடைய அமைச்சே மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சு. யுத்தம் நிறைவடைந்த போதிலும் அம்மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கு இந்த அமைச்சினால் நடவடிக்கை எடுக்க முடியும்.
வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரும் ஒன்றினைந்து பணிபுரிவோம் – என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் டீ.எம்.அமரதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு, இராஜாங்க அமைச்சின் பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.