துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை அப் பெயர் சூட்டி அழைப்பதற்கான எதுவித நியாயங்களையும் அவதானிக்க முடியவில்லை.ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா வாழை இலையில் உணவுட்கொள்வதும் மரவள்ளிக்கிழங்கு நட்டு சமைத்துண்பதுமே நல்லாட்சியின் பண்பாக எஞ்சியுள்ளது.இந்த நல்லாட்சியின் மீது ஏனைய மக்களை விட முஸ்லிம்கள் ஒரு படி மேல் நம்பிக்கை வைத்திருந்தனர்.இவ்வாட்சிக்கு 95சதவீதத்திற்கும் மேல் ஆதரவை நல்கிய முஸ்லிம்களுக்கு இவ்வாட்சி பலத்த ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது.அன்று மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் இடம்பெற்ற இனவாத செயல்களை விட தற்போது அதிகமான இனவாத செயல்களை அவதானிக்க முடிகிறது.அதில் பல விடயங்கள் சில காரணங்களால் மூடி மறைக்கப்படுகின்றன சிலவை மஹிந்த தலையில் கட்டப்படுகின்றன.இருந்தாலும் மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் இனவாதிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை விட மிகப் பெரிதான இடம் இவ்வாட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் இனவாதிகளின் ஆட்டம்
இவ்வாட்சி தோன்றிய ஆரம்ப காலத்தில் இனவாத அமைப்புக்கள் அடங்கி இருந்தாலும் தற்போது முழு வீச்சோடு செயற்பட்டு வருகின்றன.மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் இனவாத அமைப்புக்கள் சில இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாலும் அது இந்தளவு தீவிரமாக அமைந்திருக்கவில்லை.அண்மையில் இலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டியில் ஒரு பாரிய இனவாத ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.அதில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் போன்ற பகிரங்க பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தன.இதன் போது பள்ளிவாயல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பெயர் பதாதையும் சேதமாக்கப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து கொழும்பில் அவர்கள் கண் வைத்த முஸ்லிம்களின் முன்னணி ஆடை வர்த்தக நிலையம் ஒன்றும் பற்றியது.இதனை தொடர்ந்து மட்டக்களப்பில் தங்களது ஆட்டத்தை காட்டினர்.அங்கு நீதி மன்றத்தை பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாகவே அவமதித்திருந்தார்.சில காலங்கள் முன்பு இதற்கு பிறகு நான் நீதிமன்றம் செல்லப் போவதில்லையெனக் கூறி நீதிமன்றத்தை அவமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் தனித்தனியாக இயங்கி வந்த இனவாத அமைப்புக்கள் இவ் ஆட்சியிலேயே ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
தற்போது பொது பல சேனா அமைப்பானது இஸ்லாத்தில் மீது பலவாறாங்க தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது.இதில் அல்லாஹ்வின் மீதும் குர்ஆனின் மீதும் பௌத்தர்களை பொலிஸ் நிலையம் சென்று முறையிடுமாறு கூறியுள்ளமை இஸ்லாத்தில் தகிய்யா என்ற கொள்கை உள்ளதாகவும் அக் கொள்கை மாற்று மதத்தவர்களது காணிகளை அபகரிக்க கூறுவதாகவும் கூறி வருகிறது.இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக பிரச்சாரத்தை செய்தும் வருகின்றனர்.இதுவெல்லாம் தவறான பிரச்சாரங்கள்.அண்மையில் பொது பலா சேனா அமைப்பானது தொல்பொருள் மதிப்புள்ள தளங்களை அழிக்குமாறு இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான தொல் பொருள் நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் 59 உள்ளதாகவும் கூறியுள்ளது.பொது பல சேனா அமைப்பானது எந் நேரமும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தினருடம் வம்பிழுத்துக் கொண்டே உள்ளனர்.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு சில விடயங்கள் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தனர்.தற்போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரைக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.
இனவாதிகளின் செயல்கள் மீதான பார்வை
இலங்கை நாட்டில் ஒரு கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வதற்குரிய உரிமை உண்டு.அந்த கோரிக்கை/நோக்கம்/விழிப்புணர்வு ஒரு சிறந்ததை அடையும் எண்ணத்தில் அமைதல் வேண்டும்.இன்று சிலர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களை குறி வைத்ததாகவே உள்ளது.அவர்களது வியாபார நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றெல்லாம் பகிரங்கமாக கூறுவது ஏற்க தகுந்த விடயங்களல்ல.ஒருவரை அழிக்க நினைப்பதை யாராலும் ஏற்க முடியாது.அது பிழையான செயல் என்பது தெட்டத் தெளிவான உண்மை.இலங்கை நாட்டில் இனவாதிகள் இலங்கை நாட்டு முஸ்லிம்களின் வியாபாரங்களை இப்படி முறையற்ற விதத்தில் முடக்க நினைப்பதை விட தங்களது இனத்தவர்களின் வர்த்தகத்தை எப்படி முறையான விதத்தில் முன்னேற்றலாம் என சிந்திப்பது ஏற்புடையது.இவ்வாறு அவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் இலங்கை நாட்டில் வர்த்தக போட்டி ஏற்பட்டு இலங்கை நாட்டின் அபிவிருத்திக்கும் அது காரணமாக அமையும்.இனவாதிகளின் இப்படியான செயற்பாடுகள் இலங்கை நாட்டின் வீழ்ச்சி அத்திவாரமிடும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாட்சி மலருவதற்கு முன்பு இலங்கை நாட்டின் நீதித் துறை மீது ஐ.நா சபையிலேயே நம்பிக்கையற்ற வார்த்தைகள் தான் வெளிப்பட்டிருந்தன.இவ்வாட்சி மலர்ந்ததன் பிற்பாடு இவ்வாட்சியின் போக்கை அவதானிக்க சில மாத கால அவகாசங்கள் வழங்கப்பட்டன.தற்போது மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சியில் இருந்ததை விட இனவாத ஆட்டங்கள் அதிகரித்துள்ளன.தற்போது இலங்கை நாட்டின் நீதித் துறை மீது நம்பிக்கை வரும் வகையிலான எந்தவொரு சமிஞ்சைகளையும் அவதானிக்க முடியவில்லை.மாறாக அந்த உயரிய நீதி மன்றங்களை அவமதிக்கும் செயல்களே பேரினவாதிகளால் அரங்கேறி வருகின்றன.இது எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஐ.நா சபையில் இலங்கை தொடர்பாக வெளிவரவுள்ள அறிக்கையில் பெரிதும் தாக்கம் செலுத்தலாம் என நம்பப்படுகிறது.2016-12-19ம் திகதி திங்கள் கிழமை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான 50 பக்க அறிக்கைகளை ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளமை இதன் தாக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான இலங்கை அரசின் நீதியின் மீதான நம்பகத் தன்மையற்ற விடயங்கள் தான் தமிழர் தரப்பிற்கு ஐ.நா சபையில் இலங்கையின் கழுத்தை இறுக்கும் ஆயுதமாகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது பல சேனா அமைப்பானது குர்ஆனில் தகிய்யா என்ற வசனம் உள்ளதாகவும் அது ஏனைய மதத்தினரின் காணிகளை அபகரிக்க கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.அண்மையில் மீண்டும் தகிய்யா என்ற சொல்லை அவ் அமைப்பு உச்சரித்திருந்தது.இலங்கை முஸ்லிம்களில் அதிகமானவர்கள் தகிய்யா என்ற சொல்லை அறிந்திருக்க வாய்ப்பில்லை.இது ஷீயாயிஸ்ஸம் சார்ந்ததொரு கொள்கை.இது ஷீயா கொள்கையினரிடையே பலவாறான வடிவங்களில் காணப்படுகின்ற போதும் அது கூட தவறான வழியின் பால் யாரையும் வழி காட்டவில்லை.ஒருவர் ஒரு நல்ல விடயத்தை செய்வதற்கு பொய் கூற வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்.அப்போது பொய் கூறி செய்வதில் தவறில்லை என்பதே தகிய்யாவை விளங்கிக் கொள்ள பொருத்தமான உதாரணமாகும்.இங்கு கூட யாரையும் ஏமாற்றுமமாறு ஷீயா கொள்கை வழியில்லை.நிர்ப்பந்த நிலையில் வேறு வழியின்றியே இந்த வழிமுறை தவறில்லை என்ற வழி காட்டல்களை வழங்குகிறது.
கிழக்கு மாகாணத்தில் 59 தொல் பொருள் இடங்கள் உள்ளதாக பொது பல சேனா கூறியிருப்பது மிகவும் ஆபத்தானது.அவ்வாறு கிழக்கில் 59 இடங்கள் உள்ளதாக அறிய முடியவில்லை.இந்த நிலை தொடர்ந்து அங்கும் இங்கும் தொல் பொருள் நிலையங்கள் எனக் காட்டி கிழக்கு முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களில் வாழ்வதனை சவாலுக்குட்படுத்துவது பொது பல சேனாவின் நோக்கமாக இருக்கலாம்.இந்த 59 இடங்களாக அவர்கள் எந்தெந்த இடங்களை குறிப்பிடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது சிறப்பானது.பொத்தானை பள்ளிவாயலுக்கு முஸ்லிம்கள் செல்ல முடியாத வகையில் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் தடுத்துள்ளமை இவ்விடத்தில் நினைவூட்டத்தக்கது.அண்மையில் அமைச்சர் தயா கமகே அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொல் பொருள் நிலையங்களை எல்லையிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.கடந்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அமைச்சர் தயா கமகே கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை 12000 ஏக்கர் கரையோரப் பிரதேசங்கள் தீகவாபி புனித பூமிக்கு உட்பட்டதென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவைகளை வைத்து நோக்கும் போது கிழக்கு முஸ்லிம்களை நோக்கி பாரிய ஆபத்தொன்று வருவதை அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
பொது பல சேனாவும் முஸ்லிம் அமைப்புகளும்
தற்போது பொது பல சேனா அமைப்பானது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்துடன் பாரிய மோதலொன்றைச் செய்து அதன் செயலாளரை பல நாட்கள் விளக்கமறியலில் வைக்கச் செய்திருந்தது.தற்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு கடிதம் எழுதி குர்ஆன் தொடர்பில் சில விடயங்களுக்கு விளக்கம் கோரியுள்ளது.முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலர் இதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டுமெனக் கோரியும் இது வரையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அவர்களுக்கு பதில் வழங்காமை மிகவும் கவலையான விடயம்.இஸ்லாம் தொடர்பில் ஒருவர் வினா எழுப்புகின்ற போது அதனை தெளிவூட்டும் கடமை முஸ்லிம்களுக்குள்ளது என்பதை யாராலும் மறுக்க விடயமோ முடியாது.இது தொடர்பில் தாங்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு உதவவுள்ளதாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் கடிதம் அனுப்பியுள்ளது.அவர்களுக்கு விவாதங்கள் என்றால் சற்று ஆர்வம் அதிகம் தான்.இக் கடிதத்திற்கு பதில் வழங்கவே அவர்கள் பல நாட்களின் பிறகு பதில் அளிக்கவுள்ளதாக கூறியிருந்தனர்.இவர்கள் பொது பல சேனாவிற்கு பதில் அளிப்பார்கள் என இனியும் நம்ப முடியாது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அண்மையில் விமர்சனத்திற்குள்ளான பாராளுமன்ற உரை தொடர்பில் பொது பல சேனா அமைப்பானது ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.இக் கடிதம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு பொது பல சேனாவினால் எழுதப்பட்டிருந்தாலும் அவருக்கு முறையான விதத்தில் அனுப்பப்படவில்லை.இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் தனக்கு உரிய முறைப்பிரகாரம் கடிதம் அனுப்பபட்டால் பதில் அளிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.அக் கடிதத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய விடயமுள்ளது.பொது பல சேனா அமைப்பானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு விளக்கம் கோரி அனுப்பிய குர்ஆன் வசனங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்குமான கடிதத்தில் உள்ளடக்கியிருந்தது.இதற்கு முன்பு ஒரு ஊடக மாநாட்டிலும் இதே குர்ஆன் வசனங்களை அவ் அமைப்பு கூறியிருந்தது.ஒரு விடயத்தை ஒருவர் பல முறை முன் வைக்கின்றார் என்றால் அதனை யாராலும் உடைக்க முடியாதென பலமாக நம்புவதை அறிந்துகொள்ளலாம்.இந் நிலை தொடர்கின்ற போது சாதாரண மக்கள் தங்களது அறிவிற்கு உட்பட்ட வகையில் இதற்கு விளக்கம் கொடுக்க முனைவார்கள்.சில வேளை இது முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான முடிவுகளை வெளிப்படுத்தலாம்.எனவே,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவானது அவர்களது கேள்விகளுக்கு பல கோணங்களில் சிந்தித்தித்து அழகிய பதிலை வழங்குவது இதற்கு பொருத்தமான தீர்வாக அமையும்.இனியும் கச்சைக்குள் வாலை ஒழிக்கும் செயற்பாடுகள் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இனவாதிகளுடன் விஜயதாஸ பக்ஸ
ஒரு விடயத்திற்கான தீர்வை பல வழிகளை கைக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.அதில் ஒன்று அவர்களுடன் நேர் எதிரே உட்கார்ந்து அவர்களது தேவைகள்,பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதாகும்.அவர்கள் கூறும் விடயங்கள் நியாயமற்றவை என்பதை உணரும் போது அவர்களை பிரச்சினைகள் எழாத வழியில் மென்மையாக அடக்க சிந்திப்பது பொருத்தமானது.அதற்கும் அவர்கள் அடங்காத போது மிகக் கடுமையான போக்கை கையாண்டாவது அவர்களை அடக்க வேண்டும்.ஹிஸ்புல்லாஹ்வின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பான காலப்பகுதியில் நீதி அமைச்சர் விஜயதாஸ பக்ஸ பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பேச்சு வார்த்தை நடாத்தி இருந்தார்.இச் சந்திப்பு தொடர்பில் பொது பல சேனா அமைப்பானது சாதகமான வார்த்தைகளை கூறியிருந்தன.இதற்குப் பிறகு அவர்கள் அடங்கினால் அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.அச் சந்திப்பின் பிறகு அவர்களது ஆட்டங்கள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.இதன் பின்னர் ஞானசார தேரர் இஸ்லாம் தொல் பொருள் தளங்களை அழிக்குமாறு கூறியுள்ளதாக கூறியுள்ளார்.இப்படி இஸ்லாம் கூறவில்லையென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவே கூறியிருந்தார்.ஞானசார தேரரை அவமதித்ததாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துர் றாஷிகை கைது செய்ய முடியுமாக இருந்தால் ஏன் ஞானசார தேரரை கைது செய்ய முடியாது?
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜ பக்ஸ அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு மட்டக்களப்பு சென்றிருந்தார்.அங்குள்ள பேரின மக்களின் தேவைகள் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.உங்களை அன்று நீதி மன்றம் தானே தடுத்தது.இன்று உங்களை நீதியமைச்சராகிய நான் அழைத்துச் செல்கிறேன் யார் என்ன செய்கிறார்கள்? என்ன சொல்கிறார்கள்? என்று பார்ப்போம் போன்றும் நீதி அமைச்சரின் இச் செயற்பாட்டை நோக்கலாம்.இவர் அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து முஸ்லிம்களின் மனது புண் படும் வகையிலும் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் கதைத்தை வைத்து சிந்திக்கும் போது இப்படித் தான் சிந்திக்க தோன்றுகிறது.நாம் அனைத்தையும் எதிராக சிந்திப்பது சின்றந்ததல்ல.நீதி அமைச்சரை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த பொது பல சேனா அமைப்பினர் மட்டக்களப்பில் வாழ்கின்ற பேரின மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதாகவும் அதனை நீதியமைச்சராகிய விஜயதாஸ ராஜபக்ஸவை நேரில் சென்று பார்வையிடவும் அழைத்த்திருக்கலாம்.அன்று இவர்களது அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றிருக்கலாம்.
குறித்த விஜயத்தின் பின்னர் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவர் இனவாதிகளில் பொறியில் அகப்பட்டுவிட்டார் என்பதை தெளிவாக கூறியிருந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசாங்க அதிகாரிகளை மிகவும் கேவலமாக பேசிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பேரின மக்களின் குரலாக அவர் வர்ணிப்பது அவரது செயல்களை அவர் அங்கீகரிப்பதாகவே பொருள் கொடுக்கும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரின மக்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம்.அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முறையான விதத்தில் பேசி தீர்க்க முனைவதே பொருத்தமானதாகும்.தீர்வற்ற பிரச்சினைகள் எதுவுமல்ல.அவர்கள் அதற்கு உடன்பாடாது போனால் அதனை சிறுபான்மையினரின் பெரும்பான்மையினருக்கு எதிரான விடயமாக கூறுவதில் தவறில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரின மக்கள் வாழ்கின்ற அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதில் மொழிப் பிரச்சினை உள்ளதாகவும் கூறியிருந்தார்.இந்த மொழிப் பிரச்சினையால் இலங்கை சிறு பான்மையின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதன் காரணமாகவே அம்பாறை மாவட்ட மக்கள் கல்முனை கரையோர மாவட்டத்தையும் கோருகின்றனர்.இதனை பேரின மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இன்றுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாட்சியின் பங்காளிகளாகவே உள்ளனர்.இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வரசை எதிர்த்து போராடினால் இவ்வரசு முஸ்லிம்களிடம் அடிபணிந்தேயாக வேண்டும்.அண்மையில் இதே கருத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியிருந்தார்.முதலில் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.அமைச்சர் ஹக்கீமை தவிர மற்ற அனைவரும் ஒரு கூட்டின் கீழ் இணைந்து செயற்பட தங்களது விருப்பங்களை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் அனைவரும் தனது கட்சியில் வந்து இணையட்டும் எனக் கூறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவை தடுக்கின்றார்.தனது இக் கொள்கையை அமைச்சர் ஹக்கீம் கை விட வேண்டும்.அண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதிகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியுடன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்விகண்டுள்ளன.இது தொடருமானால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அமைச்சுக்களை துறந்து முதல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் (அமைச்சர் றிஷாத்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,பிரதி அமைச்சர் ஹரீஸ்) பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தாலும் அரசின் தலைவர்களை பாதிக்கும் வகையில் அவர்களது உரைகளை அமைக்க தவறியமையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.கடந்த தேர்தலில் இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுக்கொண்ட மு.காவின் தலைவர் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது மிகவும் ஆபத்தானது. அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதே கருத்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த இக்கட்டான நிலையில் கூட அமைச்சர் ஹக்கீம் இவ்வரசை புகந்து பாராட்டிக்கொண்டிருக்கின்றமை தான் வேதனையான விடயம்.தற்போது இலங்கை அரசு ஐ.நா சபையில் பலத்தை சவாலுக்குட்பட்டிருப்பதால் இந்த இக்கட்டான நிலையை தங்களது இருப்பிற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாலும் தவறில்லை.இதனை செய்கின்றளவு பலம் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமில்லை.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 02-01-2017ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 76வது கட்டுரையாகும்.