அதிபர் ஒபாமா உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்காரணமாக வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அதிரடியாக நீக்கம் செய்ய அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். மேலும் அவர்கள், குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நீக்கப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் இன்று வாஷிங்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டதாக ரஷ்ய தூதரக செய்தியை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், வெளியுறவுத்துறையின் இந்த பரிந்துரைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளிக்கவில்லை. 

அதேசமயம், அமெரிக்காவின் புதிய அதிபராக 20-ம்தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அதன்பிற்கு ரஷ்யா-அமெரிக்க உறவுகளில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என புதின் கூறினார்.