மதினாவில் வேகமாக பரவிய இஸ்லாம்

நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி முஹம்மது (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்குச் சென்று அங்கு இஸ்லாமிய அழைப்பை மேற்கொண்டார்கள். கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். “கடைசிக் காலத்தில் ஒரு நபி தோன்றுவார். அவருடன் சேர்ந்து உங்களை நாங்கள் கடுமையாகத் துன்புறுத்துவோம், கொலையும் செய்வோம்” என்று யூதர்கள் மதீனாவாசிகளிடம் அச்சுறுத்தியிருந்ததால் அவர்களுக்கு நபிகளார் பற்றிய அறிமுகம் தேவைப்படவில்லை. மதீனாவாசிகளுக்கு ஏற்கெனவே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தது. அதனால் ஹஜ்ஜுக்கு வந்திருந்த மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் கிளையினரான ஆறு இளைஞர்கள் அதே இடத்தில் உடனே இஸ்லாமிய அழைப்பை ஏற்றார்கள். 

இஸ்லாமை ஏற்ற அந்த வாலிபர்கள் அறிஞர்களாக இருந்தனர். மதீனாவில் அவ்வபோது நடக்கும் உட்பூசல்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் ஒரு தீர்வாக அமையுமென்றும், மக்களை ஒன்றிணைக்குமென்றும் அந்த இளைஞர்கள் நம்பினார்கள். ‘இஸ்லாமிய மார்க்கத்தை எங்கள் நகரத்தில் அறிமுகப்படுத்துவோம்’ என்று உறுதியேற்றனர்.

அதன்படியே மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபிகளாரைப் பற்றியே பேசினர். மதீனாவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது. 

நபித்துவத்தின் பன்னிரெண்டாம் ஆண்டு அதே ஹஜ் காலத்தில், அதே ‘அகபா’ என்ற இடத்தில் மதீனாவாசிகள் நபிகளாரை சந்தித்து, இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தமாவது “அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைக்கக் கூடாது. திருடக் கூடாது, விபச்சாரம் செய்யக் கூடாது. தங்கள் பெண் சந்ததிகளைக் கொல்லக் கூடாது. 

அறிந்து கொண்டே பொய்யெனத் தெரிந்தும், கற்பனை செய்து, அவதூறை இட்டுக்கட்டக் கூடாது. நன்மையான காரியத்தில் மாறு செய்யக் கூடாது” எனும் திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப அவர்கள் ‘பைஅத்து’ அதாவது வாக்குறுதி தந்தார்கள். அத்தருணத்தில் அளிக்கப்பட்ட இறைவசனத்தில் நபிகளார் அந்த வாக்குறுதியை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேட வேண்டுமென்றும் இருந்தது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்கக் கிருபையுடையவன். 

இரவில் நடந்த ‘அகபா’ உடன்படிக்கையில் நபி முஹம்மது (ஸல்), “என்னிடம் உறுதிமொழி கொடுத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுகிறவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். வாக்குறுதி தந்துவிட்டு பின்பு அதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே இஸ்லாமியச் சட்டப்படி தண்டிக்கப்பட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். ஆனால் ஒருவர் குற்றம் செய்து அதனை அல்லாஹ் உலக வாழ்வில் மறைத்துவிட்டால், அவரின் மறுமைநிலையில் அவரை மன்னிப்பதும் தண்டிப்பதும் அல்லாஹ்வின் பொறுத்தத்தைக் கொண்டது” என்று உறுதிமொழி எடுத்தவர்களிடம் சொன்னார்கள். 

‘இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்’ என அன்சாரிகள் உறுதிமொழி அளித்தனர். 

இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் அதாவது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என்று திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளது. 

[திருக்குர்ஆன் 60:12 ஸஹீஹ் புகாரி 4:63:3892, சீறா இப்னு ஹிஷாம்]