ஒற்றையாட்சி தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழுவதை காணமுடிகின்றது; நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்..

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், இன்று மட்டக்களப்பில், நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப் படுகொலைகள் என்பவற்றுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் எங்களின் வற்புறுத்தல்கள் காரணமாக எடுக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். 

அன்றில் இருந்து இன்றுவரை சர்வதேச சமூகத்துடன் நாங்கள் பேசிவருகின்றோம். 

அண்மையில் ஜனாதிபதி வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பயங்கரவாதிகளை தோற்கடித்ததாக கூறியிருந்தார். அந்த நிகழ்வில் நானும் பங்குபற்றியிருந்தேன். மகாத்மா காந்தியை அன்று வெள்ளைக்காரர்கள் பயங்கரவாதிகள் என்றனர். 

சுபாஸ்சந்திரபோசும் ஆயுதம் ஏந்தி போராடினார், நாங்கள் பல போராட்டங்களை நடாத்தி இரத்தம் சிந்தியுள்ளோம். எமது விடுதலைக்காகவே இந்த அர்ப்பணிப்புகளை செய்தோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தேன். நல்லிணக்கத்தை திறந்துவைத்து பயங்கரவாதம் என்று சொல்லவேண்டாம் என்று அவரிடம் கூறினோம், எங்களை தோல்வி அடைந்த சமூதாயமாக பேசவேண்டாம், வீடுகளை திறந்துவைத்து அடிமைகளுக்கா வழங்குகின்றீர்கள் என்று குரல் எழுப்பினோம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். 

இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த எங்களுக்கு ஆட்சிமாற்றம் மட்டும்போதும் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் தற்போது வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தவில்லை, ஒரு சமஸ்டி அமைப்பு முறையில் சமஸ்டி தன்மையில் ஒரு அரசியல்தீர்வு இருக்க வேண்டும் என்றே கோரிக்கையை முன்வைத்துள்ளோம். 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாங்கள் அரசாங்கத்துடன் நடாத்துகின்ற பேச்சுவார்த்தைகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் அதிகாரத்தை பகிர வேண்டும் என்ற விடயத்தில் பல இடங்களில் இணக்கப்பாடுகள் உள்ளது. 

வடக்கு கிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்று எங்கள் மக்கள் தந்த ஆணையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.அந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. வடகிழக்கு இணைப்பு மிகவும் முக்கியமானது. அதற்காக முஸ்லிம் மக்கள் மனதையும் வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு அதனைவிட மிகவும் முக்கியமானது. 

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் எங்களது உறுப்பாட்டை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்துள்ளோம். 

ஒற்றையாட்சி தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழுவதை காணமுடிகின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், என்றார்.