பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடக்கவுள்ளது..

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நோக் -டென் என்ற சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடக்கவுள்ளது.

நினா என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 185 கிலோ மீட்டர் நீடிக்கிறது. 

இந்த சூறாவளியால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்கள் வீடுகளை விட்டுச் செல்ல மறுக்கும் மக்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டாயமாக வெளியேற்ற தான் உத்தரவிட்டுள்ளதாக கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் துணை ஆளுநரான ஷிர்லே அபுண்டோ தெரிவித்துள்ளார். 

விடுமுறை காலமென்பதால், தங்கள் ஊர்களுக்கு புறப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடு வழியில் தவித்து வருகின்றனர். 

இந்த சூறாவளி வீசும் பகுதிகள் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில், தலைநகர் மணிலா உள்பட அதிக மக்கள் தொகை மிகுந்த பகுதிகள் உள்ளன.