ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானம் :அமைச்சர் மலிக் சமரவிக்ரம

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக கடந்த அரசாங்கம் 1.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். 

இந்தக் கடனுக்கான வட்டியை செலுத்துதல், ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதிக் கட்டணம், துறைமுக பராமரிப்பு செலவுகள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் நஸ்டமே தவிர இலாபம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

எனவே, கொழும்பு துறைமுகத்தின் மூலம் கிடைக்கப் பெறும் இலாபத்தில் நூற்றுக்கு 60 வீதத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவற்றை கருத்தில் கொண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த துறைமுக செயற்பாடுகளுக்காக சீன நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் குறித்து தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கரில் சீனாவின் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும், அங்கு சுமார் நான்கு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனால் இலங்கையை சீனாவின் காலணியாக மாற்ற முற்படுவதாக கூறப்படுவது பொய் என சுட்டிக்காட்டிய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் 95 வீதமானவை இலங்கையர்களுக்கே கிட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், இதன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மட்டுமே சீன நிறுவனம் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் இலங்கை கடற்படையினராலேயே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.