இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 என உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி அறிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட உள்ளது.
அதற்கான தீர்மானம் ‘செனட்’ சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’யின் உறுப்பினர் உஸ்மான் சபியுல்லா இந்த தீர்மானம் கொண்டு வந்து தாக்கல் செய்தார்.
சட்டவிரோதமான பணப்புழக்கம், வங்கிகள் மூலம் பணப்பரிமாற்றம் ஆவணங்கள் இல்லாத பொருளாதார செயல்பாட்டை குறைக்கவும் இத்தகைய நடவடிக்கை தேவை. நாட்டில் சட்ட விரோதமான பணபரிமாற்றம் மற்றும் கருப்பு பண சுழற்சியில் ரூ.5 ஆயிரம் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, அவற்றை வாபஸ் பெற வேண்டும். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அங்கு தேவைகள் அதிகரித்துள்ளது. அது போன்று பாகிஸ்தானிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களின் மதிப்பீட்டையும், வரிஏய்ப்புகளையும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
அதற்கு ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சட்ட மந்திரி ஷாகித் ஹமீத் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் மூலம் அண்டை நாடான இந்தியாவை போன்று கடும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும்.
ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதன் மூலம் மார்க்கெட் மற்றும் வர்த்தக ரீதியில் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் மீது நம்பிக்கை இழந்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படும்” என்றார்.
இருந்தும் செனட் சபையில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்குதான் பெரும்பான்மை உள்ளது. எனவே இத்தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.