எழுத்தாளர்களை கைதூக்கிவிடும் வகையில் நல்ல பல திட்டங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம்:அமைச்சர் ரிஷாத்

 

அமைச்சின் ஊடகப்பிரிவு

வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா  நகரசபை மண்டபத்தில் நடாத்திய கலாச்சார விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உருப்பினர் டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜெயதிலக, லிங்கநாதன், செந்தில்நான், மயூரன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களாக முத்து முகம்மது அப்துல் பாரி, முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் கூறியதாவது,

வவுனியாவில் நடைபெறுகின்ற இந்த விழாவில் மாணவர்கள் தமது திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தினர். அத்துடன் நமது கலாசார பண்பாடுகளையும், விழுமியங்களையும் கலைவடிவிலும், கருத்து வடிவிலும் வெளிக்கொணர்ந்து அதற்கு புத்துயிரூட்டினர். இந்த நிகழ்ச்சிகள் நமது மனதுக்கு இனிமையாகவும், ஆறுதலாகவும் இருக்கின்றன.

தமிழர்களும், முஸ்லிம்களும் மதத்தால் வேறுபட்ட போதும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். தமிழை வளர்த்தெடுப்பதிலும், வாழவைப்பதிலும் இரண்து சமூகங்களும் இணைந்து பணியாற்றி வருவது சிறப்பம்சமாகும். மொழிக்காக அவர்கள் ஆற்றுகின்ற பணி என்றுமே பாராட்டத்தக்கது. 

கடந்த வாரம் கொழும்பிலே சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்று நடை பெற்றது. அந்த விழாவை நடாத்திய இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் விழாவை ஏற்று நடாத்தும் தலைமைப் பொறுப்பை என்னிடம் கையளித்திருந்தது. விழாவுக்கு தலைமைதாங்கும் பொறுப்பை பெரும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் ஏற்றுக் கொண்டேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளிருந்து பேராளர்களாக அந்த இலக்கிய மாநாட்டுக்கு வந்த தமிழ்ப் பேரறிஞர்கள் கொழும்பிலே மூன்று நாட்கள் தங்கியிருந்து தமிழினதும், தமிழிலக்கியத்தினதும் மகிமையையும், தொன்மையையும் சிறந்த முறையில் சிலாகித்தனர். 

தமிழ் மொழியை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்ற, வளர்க்கின்ற, மூத்த எழுத்தாளர்கள் அறிஞர்கள், மற்றும் கலைஞர்களை நாங்கள் பாராட்டுவதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலே மொழியை வளர்தெடுப்பதில் ஆற்றுகின்ற பணிகளுக்காக இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.

எதிர் காலத்திலே வடமாகாண சபை உட்பட வன்னிப் பிரதேசத்திலே பணியாற்றும் அரசியல் வாதிகளான நாங்களும்,  சமூக ஆர்வலர்களும் இணைந்து இவ்வாறான எழுத்தாளர்களை கைதூக்கிவிடும் வகையில் நல்ல பல திட்டங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம். இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.