மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது:
‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.
எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.