செயலாளர் பிரச்சினை ஆட்களின் பிரச்சினை அல்ல, தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்விய பிரச்சினை – பஷீர்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14.12.2016 அன்று செயலாளர்கள் பற்றிய பிணக்கு தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புடன் நடைபெற்ற கூட்டம் சூறதுல் பாதிகாவுடன் ஆரம்பித்து சலவாத்துடன் “இனிதே” நிறைவடைந்தது.

நான் அக்கூட்டத்தில் கட்புலனையும், செவிப்புலனையும் மாத்திரமே பிரயோகித்தேன்.வாயை வலுக்கட்டாயமாக வாளாதிருத்தி வைத்திருந்தேன். 

கடந்த இரண்டு உச்ச பீட கூட்டங்களுக்கு முன்பு செப்டெம்பரில் இடம் பெற்ற கூட்டத்தில் தாறுஸ்ஸலாத்தின் புதைக்கப்பட்ட உண்மைகள் பற்றி என்னால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் தொடர்பான விவாதத்தின் போது “ஆழம் அறியாமலும் நீச்சல் தெரியாமலும்” சுழியோட நினைத்து என்னை பேசவிடாது கூக்குரலிட்ட நிகழ்வுக்குப் பின்னர் நான் உச்சபீடக் கூட்டங்களில் கருத்து தெரிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதனால் கடந்த கூட்டத்தில் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு கருத்தெதையும் வெளியிடாதிருந்தேன்.

அங்கு பேசப்பட்டவை அனைத்தும் றவூப் ஹக்கீம், ஹசனலி, மன்சூர் ஏ காதர் ஆகிய தனி நபர்கள் பற்றிய பிரக்ஞை கொண்ட கருத்துகளாகவே இருந்தன. உண்மையில் தலைவரின் அதிகாரம் பற்றியும், செயலாளர் நாயகம் ஹசனலியிக்கு அதிகாரம் அதிக “காரமாக” வேண்டும் அல்லது மன்சூர் ஏ காதருக்கு இருக்கும் அதிக காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களே பரிமாறப்பட்டன.

செயலாளர் பிரச்சினை ஆட்களின் பிரச்சினை அல்ல, தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்விய பிரச்சினை.

செயலாளர்கள் இருவரில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று பார்த்தால் இறுதியாக திருத்தப்பட்ட கட்சி யாப்பின்படிக்கு இரு செயலாளர்களில் எவருக்கும் துளியளவும் எவ்வித அதிகாரமும் இல்லை, தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உண்டு. அதியுயர் பீடச் செயலாளரும் கட்சி செயலாளருமாக தற்போது இருக்கும் மன்சூரை, நினைத்தவுடன் எந்த கேள்ளி கணக்குமற்று தலைவர் பதவி நீக்கம் செய்யலாம் என்றால் இச்செயலாளருக்கு , தலைவருக்கு அடிமைச் சேவகம் செய்யும் அதிகாரத்தை தவிர வேறென்ன அதிகாரம் உண்டு?

தலைவர் அஷ்ரஃப் காலம் தொட்டு கட்சியில் அதிகாரம் உள்ள இரண்டு பதவிகள்தான் இருந்தன. அவை தலைவரும், செயலாளர் நாயகமுமாகும், அவற்றில் தலைவர் கிழக்கை சேர்ந்தவராக இருந்த காலமெல்லாம் செயலாளர் நாயகம் வடகிழக்குக்கு வெளியே உள்ளவராகவும், தலைவர் வடகிழக்குக்கு வெளியே இருக்கும் போது செயலாளர் நாயகம் பெரும்பாலும் கிழக்கில் அம்பாறையில் இருக்குமாறும் ஒரு தார்மீக ரீதியிலான சமநிலை பேணப்பட்டு வந்தது. இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே நடைமுறையில் இருந்தது. ஒப்பீட்டளவில் முஸ்லிம் காங்கிரசின் அதிக வாக்கு வங்கி அம்பாறையில்தான் உள்ளது என்ற நியாயம் இவ்வழமைக்கு காரணமாய் அமைந்தது.

2015 யாப்பு மாற்றம் மூலம் செயலாளர் நாயகத்துக்கோ உச்சபீட செயலாளருக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்கிற நிலை, இவ்விரு செயலாளர்களும் அம்பாறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தலைவர் எனும் யானையால் விழுங்கப்பட்ட இரண்டு விளாங்காய்கள் போல் ஆகிவிட்டனர். யானையின் வயிற்றில் சமிபாட்டின் போது விளாங்காய்க்கு நிகழ்வது போல கோது மட்டும் இருக்க உள்ளீடுகள் உறிஞ்சட்பட்ட நிலைமையே செயலாளர்கள் இருவரதும் அதிகாரத்துக்கு நடந்திருக்கிறது.எனவே நமது கட்சியின் பிராந்திய சமநிலை உறிஞ்சப்பட்டு கிழக்கின் கட்சி அதிகாரம் சுரண்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் நமது கட்சியின் யாப்பில் செயலாளருக்கான அதிகாரம், தலைவருக்கு வரையறுக்கப் பட்டிருப்பதைப் போல வரையறுக்கப்படவில்லை. ஆனால் ஒரு கட்சியின் யாப்பை விட சட்ட வலுக் கூடிய இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் மூலம் கட்சியின் செயலாளர் ஒருவரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது தேர்தல்களின் நியமனப் பத்திரம் உள்ளிட்ட தேர்தல்கள் ஆணையாளரோடு தொடர்புபட்டுள்ள அனைத்து விடயங்களிலும் கையெழுத்திடும் உரிமையும் ஆணையாளரை உத்தியோக பூர்வமாக தொடர்பு கொள்ளும் அதிகாரமும் கட்சியின் செயலாளரையே சாரும்.இதனால்தான் அரசியல் சட்ட வல்லுனரான எமது பெருந்தலைவர் தனது யாப்பில் செயலாளர் நாயகத்தின் அதிகாரம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

இங்கு நமது பிரச்சினை கட்சிக்கு இரு செயலாளர்கள் இருப்பதல்லவா?
ஒரு செயலாளர் இருந்தால்தானே இந்த இலங்கை தேசத்தின் சட்டத்தை பிரயோகிக்கலாம். கட்சியின் சட்டங்களை விட நாட்டின் அரசியல் சட்டம் உயர்வானது. இதனால்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சிக்கு கடிதம் எழுதும் நிலைமை தோன்றியது. எனவே கட்சிக்குள் நிலவும் இன்றைய நிலை நமது பிராந்திய சம நிலையை பேண உதவும். மாறாக சிலர் கூறித் திரிவது போல் கட்சியை பலவீனப்படுத்தப் போவதில்லை, கட்சியை மேலும் பலப்படுத்தவே செய்யும்.

இதில் இன்னும் ஒரு அவதானத்துக்குரிய விடயம் என்னவென்றால், புதிய திருத்தப்பட்ட யாப்பில் உச்சபீட செயலாளருக்கு என்ன அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டிருப்பதாகும், அப்படி அதிகாரம் குறிக்கப்படாது இருந்திருந்தால் 14 வருட பழக்கத்தின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணையகம் செயலாளர் நாயகம் ஹசனலியையே அதிகாரமுள்ளவராக அங்கீகரித்திருக்கும். இந்நிலமையை தவிர்க்கவே சுமார் 30 வருடங்கள் கட்சியில் இல்லாத செயலாளருக்கு அதிகாரம் என்ன என்று புதிய யாப்பில் குறிக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது.இப்படி அதிகாரத்தை வரையறுத்தமையால்தான், செயலாளரை நியமிக்கவும், நீக்கவும் கூடிய அதிகாரத்தை தலைவர் தன் கையில் வைத்துள்ளார் .இதனால் புதிய செயலாளரின் மூக்கணாங்கயிறு தலைவரின் கையில் இறுகப் பற்றப்பட்டு இருக்கிறது.

எனவே, கட்சியின் உண்மையான விசுவாசிகளினதும் , நலன் விரும்பிகளினதும் பிரச்சினை யார் அதிகாரம் பொருந்திய அல்லது பொறுப்புகள் உள்ள செயலாளர் என்பதல்ல மாறாக இரு செயலாளர்களுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என்பதும், பிராந்திய சமநிலை பேணப்படவில்லை என்பதுமாகும்.

 

பஷீர் சேகு தாவூத், 

தவிசாளர் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,