அமைச்சர் ஹக்கீம் இந் நேரத்திலும் மௌனியாக இருப்பதன் மர்மம் தான் என்ன?

rauff hakeem

இப்றாஹிம் மன்சூர்

இலங்கை நாட்டில் சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் செயற்பாடுகள் உக்கிரமடைந்த போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்க நாதியற்ற நிலை தான் இருந்தது.இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கடிந்து கொண்டனர்.அண்மைக் காலமாக இலங்கை பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வலுவான பேச்சுக்களை அவதானிக்க முடிகிறது.இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ்,அமைச்சர் றிஷாத்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பேச்சுக்களை கோடிட்டுக்காட்டலாம்.ஒரு போராட்டத்தின் முதற் படி ஒரு விடயத்திற்கு எதிரான நியாங்களையும் அதன் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் எச்சரிக்கைகளையும் விடுப்பதாகும்.அந்த வகையில் இம் மூவரினதும் அண்மைக் கால பேச்சுக்கள் பாராட்டுக்குரியது.

இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவை பெற்ற கட்சி மு.கா என்பதை மறுப்பதற்கில்லை.ஏனைய கட்சிகளை விட அதற்கு பலமிருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது.இந்த மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இந் நேரத்திலும் மௌனியாக இருப்பதன் மர்மம் என்ன? ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் உரையாற்ற விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.வில்பத்து போன்ற பிரச்சினைகளில் தான் ஏதேனும் கருத்து தெரிவித்தால் அது விஸ்வரூபம் எடுக்கும் என்பதாலேயே தான் அது போன்ற விடயங்களில் மௌனமாக இருக்கின்றேன் என தனது இயலாமையை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்.அதனை மக்களால் ஒரு குறித்த காலம் வரை தான் ஏற்றுக்கொள்ள முடியும்.அமைச்சர் ஹக்கீமின்  மௌனத்தின் எல்லை தான் என்ன? என்பதை அவர் இன்னும் காலம் தாழ்த்தாது வெளிப்படுத்த வேண்டும்.மு.காவின் தலைவர் இன்னும் இன்னும் மௌனமாக இருப்பது எமது சமூகத்திற்கு அவ்வளவு சிறந்ததல்ல.

தற்போது அமைச்சர் ஹக்கீம் தனது கட்சிக்குள்ளும் வெளியிலும் பல் கோண சவால்களை எதிர்கொண்டிருப்பதால் இவ்வாறான விடயங்களினுள்ளும் கை வைத்து அதனையும் தன் தலை மீது போட்டு தனக்குள்ள சவால்களை அதிகரிக்க விருப்பமில்லாமல் இவைகள் பற்றி கதைக்காமல் இருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் இந் நேரத்தில் அமைச்சர் ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம் மக்களின் அவாவாகும்.