புலிகளுக்கு சோற்றுப்பார்சல் கொடுத்ததற்காக தமிழ் இளைஞர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கின்றனர்

ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

rishad parliament

புலிகளுக்கு சோற்றுப்பார்சல் கொடுத்ததற்காகவும் அற்ப காரணங்களுக்காகவும் தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்களாக சிறையில் காலத்தைக் கழிக்கின்றனர் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க இந்த உயர் சபை வழி வகுக்க வேண்டும். அத்துடன் கடந்த அரசாங்கத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 12000 பேருக்கு அந்த அரசு உளவியல் சிகிச்சை வழங்கி அவர்களை சமூகத்துடன் இணைந்து வாழ வழி செய்தது. எனினும் இவர்களுக்கு விஷேட வேலைத்திட்டங்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு ’ரெப்பியா’ மேற்கொள்ளும் உதவிகளுக்கு நான் நன்றி தெரிவிப்பதோடு அதனை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்த விரும்புகின்றேன்.

அழுத்கம, தர்கா நகரில் இடம்பெற்ற நாசகார நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு சொத்துக்களையும் பொருட்களையும் இழந்த முஸ்லிம்களுக்கு இற்றை வரை எந்தவிதமான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. அந்த சம்பவத்தில் தர்கா டவுனில் உள்ள ‘மல்லிகாஸ்’ என்ற தொழில் நிலையம் முற்றாக எரிக்கப்பட்டது. அண்மையிலும் அதே நிறுவனம் மீண்டும் எரிக்கப்பட்டிருக்கின்றதுஅதே போன்று கொழும்பிலே ’’பெஷன்பக்” ஆடையகம் அடுத்தடுத்து எரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த வியாபார நிறுவனங்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டுமென நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

அம்பாறை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் காணிகள் 2012 ஆம் ஆண்டு கள்ளத்தனமாக வன வளப்பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்த மக்கள் தாம் வாழ்ந்த இடங்களில் படிப்படியாக மீள் குடியேற செல்லும் போது அவர்களின் காணிகள் வன வளத்திற்குச் சொந்தமெனஅவர்களை மீள்குடியேற விடாமல் தடுக்கின்றனர். மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் கௌரவ சுவாமிநாதனுக்கு இந்த விடயங்களை சரி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது.

கிழக்கில் புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரை சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சகல சமூகங்களும் நிம்மதியாக வாழச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் சிங்கள முஸ்லிம் கலவரமொன்றை உருவாக்கி இரண்டு இனங்களுக்குமிடையே பாரிய மோதலொன்றை உருவாக்க நாசகார கூட்டமொன்று திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த சதிகாரக் கூட்டம் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த அரசாங்கம் தடுக்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். மீண்டும் இந்நாட்டில் இரத்த ஆறு ஓட வேண்டாமென்று கேட்கின்றேன்.

rishad parliament

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களை தாங்கி, தமது வளங்களைப் பகிர்ந்து அவர்களை வாழ வைத்த பூமி புத்தளம் ஆகும். அவ்வாறான புத்தளத்தில் கடந்த அரசு அனல் மின் நிலையத்தை நிறுவி அந்தப் பிரதேசத்தில் மக்களை வாழ முடியாத நிலைக்குத் தள்ளியது. தற்போது கொழும்பிலுள்ள குப்பை கூளங்களை அங்கே கொட்டும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த முயற்சியை கைவிடுமாறும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட இந்தப் புத்தளத்தின் அபிவிருத்தியில் கவனஞ்செலுத்துமாறும் கோருகின்றேன். 

வடக்குக் கிழக்கு அபிவிருத்தியிலோ, விஷேட வேலைத்திட்டத்திலோ, மீள்குடியேற்றத் திட்டத்திலோ புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்குமாறு அமைச்சர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.