எத்தனை தடை வரினும் புத்தள அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம்: அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

85e87a64-bbbd-4c94-87bb-c2dae1c622caஅமைச்சின் ஊடகப்பிரிவு

எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் ‘விழித்தெழு புத்தளமே’ என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

risad

புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை, 2015-2016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், க. பொத. சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வியலாளர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு நிறைய செய்ய ஆசைப்பட்டோம். புத்தளம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் உயர்த்துவதற்கு விரும்பினோம். தொழிநுட்பக் கல்லூரிகளை புத்தளத்திற்குக் கொண்டு வந்து இளைஞர் யுவதிகளின் தொழினுட்ப அறிவை விருத்தி செய்ய எண்ணினோம். புத்தளம் மக்கள் சொந்தக் காலில் நின்று சுதந்திரப் புருஷர்களாக வாழ வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்த போதும் ’இடம்பெயர்ந்து வந்தவன்’ என்ற ஒரே காரணத்தினாலேயே எமது செயற்பாடுகள் தடுக்கப்பட்டன. என் மீது இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பி வீண் பழி சுமத்தி உள்ளூர் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை விதைக்க முற்பட்டனர். அரசியல் அதிகாரமும் அமைச்சர் பதவியும் இருந்த போதும் புத்தளத்தில் கவனஞ் செலுத்த முடியாதவனாக வெறுமனே பாதையிலே பயணிக்கும் ஓர் அரசியல்வாதியாக மட்டுமே இருந்தேன். 

அந்த வேளையில் எமது கட்சியைப் பார்ப்பதற்கோ என்னைப் பார்ப்பதற்கோ ஆறுதல் கூறுவதற்கோ என் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை விடுவிப்பதற்கோ எவருமே இருக்கவில்லை. அந்த வேளையில் எனக்குக் கை கொடுத்த ஒரு சகோதரன் அலிசப்ரி என்பதை மிகவும் நன்றியுணர்வுடன் நான் கூற விரும்புகின்றேன். அதே போல இங்குள்ள உலமாக்களும் புத்திஜீவிகளும் எனக்கு மறைவான முறையில் ஆதரவளித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி இருக்கின்றனர். 

வடமாகாணத்திலிருந்து 1 இலட்சம் மக்கள் இங்கு வந்து குவிந்த போது புத்தளம் மக்களாகிய நீங்கள் அன்பாகவும் பண்பாகவும் ஆசையாகவும் எங்களை அரவணைத்தீர்கள். வீடு, தோட்டங்கள், பாடசாலைகள், மதரஸாக்களை எங்களுக்கு தந்து உபசரித்தீர்கள். மாணவர்களின் குறிப்பிட்ட காலம் எங்களால் பாதிக்கப்பட்டதென்பதையும் நான் வேதனையுடன் கூறுகின்றேன்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா நோக்கி சென்ற போது அன்ஸாரித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறே நீங்களும் அன்பு பாராட்டினீர்கள் என்பதை 1 இலட்சம் வடபுல மக்களின் சார்பாக கௌரவத்துடனும் நன்றியுணர்வுடனும் இங்கே சாட்சியாகக் கூறுகின்றேன். 

புத்தளத்தில் எங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவோ வேறு எந்த உள் நோக்கங்களுக்காகவோ இந்தப் பிரதேச அபிவிருத்தியில் நாங்கள் நாட்டம் காட்டவில்லை என்பதை மிகவும் தெளிவாக கூற விரும்புகின்றேன்.

புத்தளத் தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இந்த நாட்டுக்கு நிதியமைச்சரையும் சபாநாயகரையும் வழங்கி நமது சமூகத்தை சிறப்பித்த பூமி. அது மட்டுமல்ல தலை சிறந்த மார்க்க அறிஞர்களையும் விற்பன்னர்களையும் உருவாக்கி இந்த மண்ணுக்கு புகழ் பரப்பிய நகரம்.

26 வருடங்கள் பிரதிநிதித்துவத்தை நீங்கள் இழந்து நிற்பது எமது துர்ப்பாக்கியமே. இந்த ஆபத்திலிருந்து இங்குள்ள மக்களைப் பாதுகாக்க சுமார் 7 வருடங்களுக்கு முன்னரே நாம் திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மண்ணின் நலனுக்காக இந்த சமுதாயத்தின் எழுச்சிக்காக ஒன்றுபடுமாறு நாம் விடுத்த கோரிக்கையும் அது தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. எனினும் எங்கள் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை உங்கள் மண்ணின் மைந்தனுக்கு வழங்கி உங்களைக் கௌரவித்தோம்.

சகோதரர் நவவி அவர்கள் எங்களுடன் இணைந்து புத்தளம் அபிவிருத்திக்கான உழைப்பதற்கான பல்வேறு திட்டங்களைமேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளார்.

எதிர்வரும் காலங்களிலே புத்தளத்தின் அபிவிருத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுமென நான் திடமாக நம்புகின்றேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

2d3efd28-5e1d-4ceb-baea-d7029357c56d

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, மஹ்ரூப், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யஹியா, ஐ தே க முன்னாள் அமைப்பாளர் அலிகான் மக்கள் காங்கிரஸின் கல்விப் பணிப்பாளர் டொக்டர் ஷாபி, குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அசார்டீன் மொய்னுதீன், முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சி மற்றும் பலர் பங்கேற்றனர்.