மட்டக்களப்பிற்கு செல்லவிருந்த பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தும் முயற்சிகள் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது அதனால் அவர்கள் மட்டு. நகருக்குள் நுழையும் போது உயிரிழப்புக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகாகவே இடைநடுவில் அவர்களை மறித்து தடை உத்தரவினை கையளிக்குமாறு பொலிஸாரை பணித்தோம் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அதேநேரம் நீதிமன்ற தடை உத்தரவை கிழித்தெறிவது மன்றினை அவதூறு செய்வதாகவே கருத்தப்படும் அந்த தவறை இழைப்பவர்களை கைது செய்வது உரிய நடைமுறையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புத்தசாசன அமைச்சின் எதிர்கால செயற்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் உள்ள விகாரைகள் உடைக்கப்படுகின்றமை தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. இது தொடர்பில் தற்போது அரசாங்கமும் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது.
அதனால் வடக்கு மாகாண சபையிலும் கூட அமைச்சர்கள் இது தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.
வடக்கு மாகாண சபையானது தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கும் சபையாகவும் இருக்க முடியாது. அங்கு அவ்வாறான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது இந்த விடயத்தினை பொறுத்தவரையில் வடக்கு மாகாண சபையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பயனற்றது என்றே குறிப்பிட முடியும்.
அதற்கான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இல்லை என்று பொருள்பட கூறவில்லை இருப்பினும்தனிப்பட்ட மதம் சார்ந்த பிரேரணைகள் உருவாக்கப்பட்டால் அதனை ஏற்கமாட்டோம்.
இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தினை பறிப்பதற்கு எந்த மாகாண சபைகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் உள்ள பழைய விகாரைகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் தற்போது உத்தேசித்து வருகின்றது. கடந்த காலங்களில் யுத்த காரணத்தினால் வடக்கு கிழக்கில் புனரமைக்க முடியாது போன விகாரைகளை தற்போது புனரமைக்கத் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்தினை சீர்குலைப்பதாகவே உள்ளன.ஆனால் முன்னர் போன்று இல்லாமல் எமது நாட்டின் நான்கு மதங்களுக்கு பொறுப்பாக நான்கு அமைச்சர்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஜனாதிபதி தலைமையில் இன்று கூடி பேச்சுவார்த்யொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சமாதானத்தினை நிலையானதாக மாற்றுவது தொடர்பில் பேச தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பெளத்த மற்றும் முஸ்லிம் தமிழ் மதகுருக்களையும் நாம் அழைத்துள்ளோம். அதேநேரம் மட்டக்களப்பிற்கு செல்ல முற்பட்ட பிக்குகள் குழுவை அரசாங்கமே தடுக்க கோரியது.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்தே பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக்கொண்டு பிக்குகள் மட்டு. நகருக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். அதேநேரம் இங்கிருந்து செல்லும் பிக்குகள் குழு மீது தாக்குதல் நடத்துவும் மட்டக்களப்பிற்குள் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்பே நாம் குறித்த பிக்குகளை செல்லாது தடுக்க நேரிட்டது.
அங்கு உயிர் சேதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்றே நாம் அந்த தீர்மானத்தினை எடுத்தோம்.
எவ்வாறாயினும் அங்கு நீதிமன்ற தடை உத்தரவு கிழித்தெறியப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. காரணம் நீதி மன்றத் தடை உத்தரவை கிழித்தெறிவது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாகும் எனவே அதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதே உரிய தீர்வாகும். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்த பின்னர் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும்.எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டவே பெரிதும் முயற்சிக்கின்றோம்.
தன்னின வாதபோக்கில் செயற்படுபவர்களுக்கு அரசாங்கம் இடமளிக்கின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் கடந்த அரசாங்கம் போன்று தன்னினவாதிகளுக்கு அரசாங்கம் இடம்கொடுக்கவில்லை.
பிரச்சினைகளின் பாரதூர தன்மையை அறிந்துகொண்டு செயற்படுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இது போன்று அண்மையில் நான் பாராளுமன்ற உரையில் குறிப்பிட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு தொடர்பிலான விடயங்களை அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் மறுத்தாலும் அதன் முழுப்பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அரசாங்க தரப்பு அமைச்சர்களே இதனை நிராகரித்தாலும் உரிய தருணத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்பதையே நான் சுட்டிக்காட்டியிருந்தேன் என்றார்.