பொது பல சேனாவின் கேள்விகளுக்கு ஜம்மியத்துல் உலமா எதுவித மறுப்புமின்றி பதிலளிக்க வேண்டும்

இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் இன்னல்களை வழங்கி வரும் பொது பல சேனா அமைப்பானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு பல்வேறு வினாக்களை உள்ளடக்கிய கேள்விக் கணைகளை தொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சில காலங்கள் முன்பு பொது பல சேனா அமைப்பானது அல் குர்ஆனில் இல்லாத பொல்லாத விடயங்களை இருப்பதாக சிங்கள மக்களிடம் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தது.அவ் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கையில் அல் குர்ஆனை தடை செய்ய வேண்டுமென்று கூட கூறியிருந்தார்.இவைகள் இஸ்லாத்தின் மீது ஏனைய மதத்தவர்களின் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை பதிக்கச் செய்யும் விடயங்களாக அமைந்தமையால் அது முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பை பெற்றிருந்தது.தற்போது இவ் அமைப்பானது இஸ்லாத்தின் மீது தான் கருதும் பிழைகளுக்கான தெளிவுகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் கோரியுள்ளது.

pothu bala sena and acju risvi mufthi

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவாவது இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவை கொண்ட அமைப்பாதலால் பொது பல சேனாவானது அவ் அமைப்பிடமிருந்து இவ்வாறான விடயங்களுக்கான தெளிவுகளை பெற அமைப்பு முயல்வது ஆரோக்கியமான விடயமாகும்.இவ்விடயத்தில் முஸ்லிம்கள் இதற்கு அங்கு கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும் இங்கு கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும் என விவாதிக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிற்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்ய வேண்டும்.அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் பல அமைப்புக்களை சேர்ந்த மார்க்க அறிஞ்சர்களின் கருத்துக்களை உள் வாங்கி பதில் வழங்க முயற்சிப்பதே மிகவும் சிறப்பானதாகும்.இதுவே எமக்குள் இது தொடர்பில் எதிர்கால விமர்சனங்கள்  எழாமல் பாதுக்காப்பதற்கு உகந்த செயலுமாகும்.

அக் கடிதத்தில் அல் குர்ஆனை அவமதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாதென (அக் கடிதத்தின் அடிப்படையில் அல் குர்ஆன் பிழையான கருத்தை கூறினாலும் சரி) அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கையொன்றில் கூறிய விடயத்தையும் இஸ்லாம் ஒரு தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதம் என்ற விடயத்தை அடிப்படையாக கொண்ட வினாக்களையும் அவதானிக்க முடிகிறது.அவ் அமைப்பானது தனது கடிதத்தில் இது தொடர்பான சில குர்ஆன் வசனங்களுக்கும் தெளிவு கேட்டுள்ளது.குர்ஆன் பற்றி ஆய்வு செய்யும் உரிமையை இஸ்லாம் அனைவருக்கும் வழங்கியுள்ளது.அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? (47:24) என குர்ஆன் கேள்வியும் எழுப்புகிறது.ஒருவர் ஆய்வு செய்கின்ற போது அவரது ஆய்வு சரியான வழியில் அமையும் போது சரியான பதிலையும் பிழையான வழியில் அமையும் போது பிழையான பதிலையும் வழங்கும்.ஒருவர் ஒரு ஆய்வின் போது பெறப்பட்ட பதிலை இதற்கு முன்னர் ஆய்வு செய்தவர்களின் பதில்களோடு ஒப்பிட்டு கலந்துரையாடும் போதே சரியை நோக்கிய மிகவும் நெருங்கிய பதிலையும் தனது ஆய்விலுள்ள குறைபாடுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் குர்ஆன் மீதான பொது பல சேனாவின் ஆய்வு குர்ஆனிற்கு எதிராக அமைந்துள்ளது.அதனை சரியென ஏற்றுள்ள முஸ்லிம்களிடம் அது பற்றி கேட்பது ஆரோக்கியமான அணுகு முறையாகும்.இதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எதுவித மறுப்புமின்றி பதிலளிக்க வேண்டும்.இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பதில் வழங்க தயங்கும் போது அது இஸ்லாத்தில் குறைபாடுள்ளதாக அனைவராலும் கணக்கிடப்படுவதோடு இதற்கு ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்கள் பதில் அளிக்க தயங்கியதாகவே பொருள் படும்.பொது பல சேனா அமைப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அவர்களுக்கு அறிவித்துள்ளதோடு இவர்களது வினாக்களுக்கு பதில் அளிக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும்  அறிவித்துள்ளது.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் 28-11-2016ம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இறைவேதமான குர்ஆனைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாதென்ற அடிப்படையில் உரையாற்றியிருந்தார்.அண்மைக் காலமாக இவர் இனவாதத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் மிகவும் வீரியத்தோடு குரல் கொடுத்து பலரது பாராட்டை பெற்று வரும் ஒருவராவார்.அவர் குர்ஆன் மீது கொண்ட பற்றின் காரணமாக இதனை கூறி இருந்தாலும்  இக் கூற்று ஏற்க முடியாததொன்றாகும்.

ஒரு முஸ்லிம் ஒரு போதும் அல் குர்ஆனை கேள்விக்குட்படுத்த முடியாது.அதனை தனது சிந்தனை மறுத்தாலும் ஏற்கத்தான் வேண்டும்.அல்லாது போனால் இஸ்லாத்தை நிராகரித்தவனாக கருதப்படுவான்.எனினும்,அதனை அந்நிய மதத்தவர்களிடமும் எதிர்பார்க்க முடியாது.அவர்கள் தங்களது சிந்தனைகளை போட்டு சிந்தித்தே இஸ்லாத்தின் பக்கம் தங்களது முகத்தை திருப்புவார்கள்.முஸ்லிம்கள் கூட இஸ்லாத்திலுள்ள சில விடயங்களை அது அப்படித் தான் என நம்பாது இயன்றவரை அதிலுள்ள தார்ப்பரியங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.குர்ஆனை பற்றி அந்நியர்களால் வினாக்கள் எழுப்பப்படும் போது அதனை விமர்சிக்காது  அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தர்க்க ரீதியான பதில்களை முஸ்லிம் சமூகம் வழங்க வேண்டும்.பொது பல சேனா அமைப்பானது கடிதம் மூலம் அழகிய முறையில் வினா எழுப்பியுள்ளதால் அது பற்றி முஸ்லிம்கள் விமர்சிப்பது இஸ்லாத்தின் மீது தவறான அர்த்தத்தை கற்பித்துவிடும்.இஸ்லாத்தின் மீது அந்நியர்களால் விடுக்கப்படும் வினாக்களுக்கு தர்க்க ரீதியான பதில் வழங்க முடியும் வகையில் தான் இஸ்லாமிய கொள்கைகள் கருத்தாழமிக்கதாகவும் அமைந்துள்ளன.

இதற்கு முன்னர் பொது பல சேனாவானது அல் குர்ஆன் பற்றி விவாதிக்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை அழைத்திருந்தது.இதன் போது அ.இ.ஜ.உ பின் வாங்கியிருந்தது.பௌத்த தேரர்களினூடான நேரடி விவாதம் தங்களுக்கு ஆபத்தாக வந்து முடியும் என்ற காரணத்தாலும் விவாதம் போன்ற அதிரடிப் போக்குகளில் அனுபவமற்ற காரணத்தாலும் அவர்கள் இதனை தவிர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இதே விவாத அழைப்பை பொது பல சேனா அமைப்பானது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு விடுத்திருந்தால் அவர்கள் நிச்சயம் அதனை ஏற்றிருப்பார்கள்.இப்படி வினாக்களை தொடுக்கும் போது அ.இ.ஜ.உ பதில் அளிக்காதென பொது பல சேனா அமைப்பானது கணக்குப் போட்டு தனது கூற்றை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம்.பொது பல சேனா அமைப்பானது இதனை வைத்து இன முறுகலை ஏற்படுத்த நினைத்திருந்தால்  ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு விவாத அழைப்பை விடுத்து சாதிப்பது இலகுவானது.இதனை வைத்து நோக்கும் போது அவர்களது நோக்கம் தங்களது கருத்தை மக்களிடம் சரியென காட்ட முனைவதென்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.பொது பல சேனா கேட்ட கேள்விகளானது இஸ்லாமியர்கள் சந்தித்த முதற் கேள்விகளல்ல.இதே கேள்விகள் பலராலும் கேட்கப்பட்டதே.இது வரை அதிகாரத் தொனியுடன் தனது போக்கை அமைத்து வந்த பொது பல சேனாவானது அத் தொனியை கை விட்டு மிகவும் நாகரீகமான போக்கை இதன் போது கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தை ஆய்வு செய்யவென கிளம்பிய பலர் அதன் ஈர்ப்பால் கவரப்பட்டு இஸ்லாமிய ஒளிக்குள் சங்கமித்த வரலாறுகள் அன்றும் இன்றும் நிறைவாகவே உள்ளன.நபியவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குர்ஆனை ஒருவர் செவியுறும் போது அவர் இஸ்லாத்தினுள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் காதுகளுக்கள் பஞ்சை வைத்துக் கொண்டு சென்ற வரலாறுகளும் உள்ளன.அதனையும் மீறி பலரது காதுகளை துளைத்து நுழைந்த குர்ஆன் வசனங்களால் அவர்கள் நேர் வழி பெற்றிருந்தனர்.தற்போது பொது பல சேனா அமைப்பின் கேள்விகளினூடாக பலரிடம் இவ்விடயம் சென்றடையப்போகிறது.அந்நிய மதத்தவர்களிடம் நேரடியாக குர்ஆனை கொண்டு சென்று போதிக்கும் போது அவர்கள் அதனை அறிவதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட இவ்வாறான பேசு பொருளின் பின்னர் இஸ்லாத்தை போதிக்கும் போது அதனை அறிவதற்கு வழங்கும் முக்கியத்துவம் அதிகமாகவிருக்கும்.இதனை பொது பல சேனா அமைப்பிற்கான பதில் என்ற தலைப்பில் எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்நிய மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியுமோ அத்தனை வழிகளையும் பயன்படுத்தி சேர்க்க முனைய வேண்டும்.குறிப்பாக மின்னஞ்சல் வழியாக கேட்போருக்கு வழங்கும் ஏற்பாடு செய்வதோடு எழுத்து,ஒளி,ஒலி  என அத்தனை வழிகளிலும் இதற்கான பதில்கள் அமைவது சிறப்பாகும்.

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.