இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாட்டுத் தலைமைகளிடம் வலியுறுத்தி வருகிறோம்!

“கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை”.
இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாட்டுத் தலைமைகளிடம் வலியுறுத்தி வருகிறோம். வெளிச்சம் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாட்.

சுஐப் எம் காசிம்

இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து அற்றுப்போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

நேத்ரா தொலைக்காட்சியில் அதன் நடப்பு விவகார பணிப்பாளர் யூ.எல்.யாக்கூபினால் நெறிப்படுத்தப்பட்ட வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் சிறுபான்மை மக்களின் மன எழுச்சி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக தேசிய முன்னனியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹில் மௌலானா ஆகியோரும் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட்டனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது:

மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதமான சிறுபான்மை மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளும் முழு மூச்சாக உழைத்திருக்கின்றன. மஹிந்த அரசாங்கத்தின் இறுதிக் காலப் பகுதியில் சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் சமூகத்தவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களைத் தாங்க முடியாததனாலேயே அந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி நல்லாட்சி உருவாக பாடுபட்டனர்.

 

இந்த அரசாங்கத்திலும் இனவாத நடவடிக்கைகள் முகிழ்விடத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக இனவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காது போயுள்ளன. இந்த விடயங்களை அமைச்சரவையிலும் பாதுகாப்பு சபை கூட்டங்களிலும் மற்றும் ஜனாதிபதி, பிரதமரிடத்தில் தனித்தனியாகவும் எத்திவைத்துள்ளோம். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நல்லாட்சி மீதான நம்பிக்கை அற்றுப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதையும் சிறுபான்மை மக்களின் அச்சத்தையும் கவலையையும் அவர்களுக்கு கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். இந்த விடயங்களில் சிறுபான்மைக் கட்சிகளான நாம் மிகவும் தெளிவாக ஒருமித்து செயற்படுகின்றோம்.

 

புதிய அரசாங்கம் தேர்தல் முறை மாற்றம், அரசியல் அமைப்பு சீர்திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடிய அதிகாரங்கள் பாரப்படுத்தல் போன்ற முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இந்த விடயங்களில் பெரிதளவு ஆர்வம் காட்டவில்லை. நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்திய நடவடிக்கைகளினாலேயே ஆட்சி மாற்றத்தை எங்கள் சமூகம் விரும்பியது. மீண்டும் இனவாத நடவடிக்கைகள் துளிர்விடத் தொடங்கி முஸ்லிம்கள் மீது அபாண்டங்களையும் பொய்களையும் பரப்புகின்ற செயற்பாடுகள் முனைப்படைந்துள்ளன.

 

நாமும் இந்த நாட்டின் சொந்தக்காரர்களே. பெரும்பான்மைக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். சிறுபான்மை கட்சிகளுக்குள் அரசியல் ரீதியான, கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும் சமூகம் சார்ந்த விடயங்களில் நாங்கள் ஒன்றுபட்டே செயற்பட்டு எமக்குரிய அதிகாரப் பங்கினைப் பெற்றுக் கொள்வதில் உறுதியுடன் இருக்கிறோம். எல்லா விடயங்களையும் எம்மால் வெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவற்றை விளம்பரப்படுத்தி எடுத்த முயற்சிகளை இடையில் போட்டு உடைத்து விடவும் முடியாது. அதற்காக நாங்கள் சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் வாளாவிருக்கின்றோம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் நண்பர் மனோ கணேஷனும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் ஒன்றாக அமர்ந்து பேசுகின்றோம். பதவி பட்டங்களுக்கு அப்பாலே நாம் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்கின்றோம்.

 

அண்மைக்காலமாக இனவாதம் வேகமாக கொடிகட்டிப்பறக்கத் தொடங்கியுள்ளது. சகோதர அப்பாவி சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக உசுப்பேற்றும் முயற்சிகள் தாராளமாக அரங்கேற்றப்படுகின்றன. பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் அட்டகாசம் கட்டுக்கடங்காது போய்க்கொண்டிருக்கின்றது. தர்கா நகர் களேபரத்திலும் கடைகள் எரிப்பிலும் அவர் தொடர்பாக 60 முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களால் பொலிசில் பதியப்பட்டுள்ள போதும் இற்றைவரை எதுவுமே விசாரிக்கப்பட வில்லை. இவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக நாங்கள் எமது கண்டனத்தை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றோம்.
இத்தனைக்கும் மேலாக நீதிக்குப் பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை வாழ் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் சம்பந்தப்படுத்தி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முஸ்லிம் மக்களின் மனங்களை உறைய வைத்ததுடன் அந்த உரையில் இருந்து அவர்கள் இன்னும் விடுபடாத நிலையிலேயே இருக்கின்றனர். ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த மறுநாள் நான் அவை எல்லாவற்றையும் மறுதலித்து இலங்கை முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவுமில்லை, ஆதரிக்கவுமில்லை எனவும் எந்தப்பயங்கரவாதிகளுடனும் எந்த ஒரு முஸ்லிமுக்கு கூட தொடர்பில்லை எனவும் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் சார்பில் உறுதியாக அறிவித்து மிகவும் காட்டமான உரை ஒன்றை ஆற்றினேன்.

rishad

இதே வேளை விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்து உண்மை நிலவரங்களை விளக்குவதற்காக ஜம்இய்யத் உலமா கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அதற்கிடையில் நீதி அமைச்சர் பொதுபல சேனா இனவாதிகளை சந்தித்திருந்தார். சிறையில் இருக்க வேண்டியவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து நீதியமைச்சர் சந்தித்த காரணத்தினாலேயே அவருடைய சந்திப்புக்கு நான் செல்லவில்லை. எனது நிலப்பாட்டில் இன்னும் பல அரசியல்வாதிகள் இருந்தனர் என்றும் அமைச்சர் றிஷாட் குறிப்பிட்டார்.

 

இனவாத கருத்துக்களைப் பரப்பி தொடர்ந்தும் வெறுப்பூட்டும் செயலை மேற்கொண்டு முஸ்லிம்களை ஆத்திரமூட்டிவரும் ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை நான் பகிரங்கமாகக் கண்டிக்கின்றேன். மட்டக்களப்பு விகாராதிபதியின் நடவடிக்கைகளும் மக்களை கவலை அடையச் செய்கின்றன. எவராயிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னே நிறுத்தப்பட வேண்டும்;.

 

முஸ்லிம் சமூகம் ஞானசார தேரர் போன்ற இனவாதிகள் இத்தனை நச்சுக்கருத்துக்களை விதைத்த போதும் இன்னுமே பொறுமை காக்கின்றது. நாங்கள் சட்டத்தை மதிக்கின்றோம். அரசை நம்புகின்றோம். ஆயுதங்களில் என்றுமே நாட்டம் கொண்டு வாழ்ந்தவர்களும் அல்ல எனவும் அமைச்சர் கூறினார்.

 

யுத்தத்தினால் தமிழர்கள் போன்று நாங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களே. ஆயுதம் தூக்காத ஒரு சமூகத்துக்கு அதிகாரப் பகிர்வில் பங்கு ஏன் என சிலர் கேட்கின்றனர். இது வேதனையானது. ஆயுதங்களினால் எமது சமூகம் பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்களில் அழிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறுகள் இருக்கின்றன. ஆயுதக் குழுவினால் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் ஒரே நாளில் வடக்கை விட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மாற்றாந் தாய் மனப்பான்மையுடனும் ஓர வஞ்சனையுடனுமே நடத்தப்பட்டனர். அதன் வெளிப்பாடே அவர்கள் தீர்வு முயற்சியில் தமிழர்களின் கோரிக்கைகளுடன் இணைந்து போகாமல் பிறழ்ந்து நிற்பதற்கு காரணம். கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களின் அச்சம் இன்னும் அவர்களை விட்டு நீங்கவில்லை.

 

கிழக்கு மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் இரவோடிரவாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் நீதி மன்றத்தீர்ப்பினால் இப்போது பிரிந்து இயங்குகின்றது. இதனை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற குரல்களுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்காமைக்கு அவர்கள் பட்ட துன்பங்களே பிரதான காரணம். இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம் சமூகம் மோசமாக பாதிக்கப்படும் என்ற நியாயமான அச்சம் எமக்கு உண்டு என்றும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.

 

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை உருவாக்கப்படும் என்ற விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் கயிறிழுத்தல் போட்டி நடாத்துவதாக அத்தலைவர்களின் உரைகள் அடங்கிய காணொளிக் காட்சி அடங்கிய உரைகளை ஒளிபரப்பி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் றிஷாட் இவ்வாறு பதில் அளித்தார். “சாய்ந்தமருது நகர சபை நிச்சயம் கிடைக்கும். அதற்குரிய தீர்க்கமான நடவடிக்கையை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது. அதே போன்று புத்தளத்துக்கு ஒரு மாநகர சபையும் சம்மாந்துறைக்கு ஒரு நகர சபையும் முல்லைத்தீவில் அதிக மக்கள் வாழும் ஒட்டுசுட்டானுக்கு ஒரு பிரதேச சபையும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் சம்பூருக்கு ஒரு பிரதேச சபையும் மன்னாரில் மடுவுக்கு ஒரு பிரதேச சபையும் வேண்டும் என்ற கோரிக்கையை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.