பாசத் தாயின் பரிதவிப்பு

child-mother-child121027

Mohamed Nizous

தொட்டிலில் படுக்கையிலே
தூக்கென்று அழுவாயே
விட்டு விட்டு வேலைக்கு
விரக்தியுடன் போகின்றேன்.

பசி வந்து நீ கதற
பால் சுரந்து நான் பதற
உசிரோடு உள்மனசு
விசித்து அழும் வேதனையால்

ஈ நுளம்பு மொய்க்குமோ
எறும்பு வந்து கடிக்குமோ
நீ அழுது வாடுவதை
நினைக்க மனம் பிழிகிறது.

ஆயா பார்ப்பதெல்லாம்
அம்மாபோல் ஆகுமா
தாயாய் அழுகின்றேன்
சேயே உனை நினைத்து.

போணில் டெஸ்க் டொப்பில்
போட்டோவைப் பார்த்துக் கொண்டு
நானாக என் மனதில்
நடித்துக் கொள்கின்றேன்.

வேலைக்குப் போகாம
வீட்டிலே நிற்பமென்றால்
ஆளுக்கு ஒரு கதை சொல்லி
அனுப்பி வைப்பார்கள்

வறுமை, வற்புறுத்தல்,
வசதியைக் கூட்டிக் கொள்ளல்,
பெருமைக்காய் தொழில் செய்தல்
பெற்ற அறிவால் சேவை செய்தல்
நிறையக் காரணங்கள்
நியாயப் படுத்தல்கள்
இருந்தாலும் மகனே
எல்லாத் தாய்க்குலமும்
வருந்துகிறது அடி மனசில்
வருந்தாதவள்- அடி மனுசியில்லை.