பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஸாகிர் நாயிக் தலைமையிலான ஐ.ஆர்.எப். அறக்கட்டளைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் ஐ.ஆர்.எப். இன் கீழ் வரும் 12 அலுவலகங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதன்போது, குறித்த அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், கோப்புகள், 12 இலட்சம் ரூபா பணம், மற்றும் கணினி வன் பாகங்கள் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில் ஐ.ஆர்.எப். அறக்கட்டளை மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பங்களாதேஷில் அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் தான் ஸாகிர் நாயிக்கின் உரைகளால் கவரப்பட்டதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து ஐ.ஆர்.எப். அறக்கட்டளை மீது இந்திய மத்திய அரசின் கவனம் திரும்பியது. இதனையடுத்தே குறித்த நிறுவனத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஸாகிர் நாயிக் மீதான மற்றொரு நடவடிக்கையாக இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.
இந்திய தேசிய புலனாய்வுத் துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஸாகிர் நாயிக் வெ ளிநாடுகளில் தங்கியிருக்கின்ற நிலையில் அவர் நாடு திரும்பினால் அவரைக் கைது செய்வதற்கு இந்திய புலனாய்வுத் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நாட்டின் சட்ட திட்டங்களை தாம் மதிப்பதாகவும் விசாரணைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் ஐ.ஆர்.எப். அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.