ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன!

Guard sits on the rubble of the house of Brigadier Fouad al-Emad, an army commander loyal to the Houthis, after air strikes destroyed it in Sanaa, Yemenஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படையினர் களம் இறங்கிய பிறகு நடந்த சண்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறுகிறது. அங்கு பல முறை சண்டை நிறுத்தங்கள் அமலுக்கு வந்தாலும், அவை முறிந்துபோய் உள்ளன.

இந்த நிலையில் அங்கு 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தம் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது. தற்போது ரியாத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஏமன் அதிபர் மன்சூர் ஹாதியின் வேண்டுகோளுக்கு இணங்க சவுதி கூட்டுப்படைகள் இந்த சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவோம் என அந்த படைகள் அறிவித்துள்ளன.