கல்முனை கரையோர மாவட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சிலை விவகாரம் – ஹஸன் அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிப் புலத்துக்குள் இருந்துவந்த இறக்காமம் பிரதேச சபை எல்லைக்குள் பௌத்த மதத்தைச்சேர்ந்த எவருமே குடியிருக்காத மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லி மலையில் கடந்த அக்டோபர் 29ம் திகதியன்று ஒருசில பெரும்பான்மை கடும்போக்குவாதிகளினால் அரச நிர்வாகத்தினரிடமிருந்து எவ்வித அனுமதியும் பெறப்படாமல் பலாத்காரமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரமானது அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவே இது கருதப்பட வேண்டும்.

 

மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை தொடர்ந்தும் சீண்டுவதற்காக சில கடும்போக்குவாதிகள் தமக்குள்ள அரசியல் செல்வாக்கினைப் பாவித்து அரங்கேற்றிய ஒரு ஒத்திகையாகவே இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது.

hasan ali slmc
திடீரென முளைத்த புத்தர்சிலை விவகாரம் பற்றிய பதட்ட நிலமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே பூதாகரமாகப் பரவியதன் காரணமாக இம்மாதம் 7ம் திகதி அம்பாறை கச்சேரியில் இதுபற்றி கலந்தாலோசிக்கும் நோக்குடன் கூட்டப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விடயம் சார்பாக விளக்கம் அளித்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சரும் புpரதான ஆளும்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமாகியவர் தனது உரையில் அகங்காரமாக சவால்விடும் தொனியில் குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மையில் எம்மை கதிகலங்க வைத்துள்ளன. அரச அநுமதியின்றி நடந்ததாக கூறப்படும் இந்த அத்துமீறலுக்கு அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே துணை போயுள்ளதானது நாட்டின் சட்டம் ஓழுங்கு முறைக்கப்பால் இம்மாவட்டத்தில் வேறு ஒரு சக்தியின் செல்வாக்கு மேலோங்கியிருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

 
தீகவாப்பி கோயிலுக்கு சொந்தமான 12,000 ஹெக்டயர்; நிலத்தில்தான் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை வசிக்கும் சகல சிறுபான்மை மக்களும் தஞ்சமடைந்துள்ளதாகவும் அதனால் தாங்கள் நினைத்த இடத்தில் வேண்டுமானால் எப்போதும் எங்கும்; சிலைகளை நிறுவ முடியும் என்ற பொருள்பட அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது சிலை நிறுவியுள்ள இறக்காமம் எல்லைக்குள் இன்னும் 19 இடங்களில் எம்மால் சிலைகளை நிறுவ முடியும் என்றும் அவர் மறைமுகமாக சவால் விட்டுள்ளார்.

 
பெரும்பான்மையின கடும்போக்காளர்களால் அவ்வப்போது அரங்கேற்றப்பட்டுவரும் இதுபோன்ற இனவாத நடவடிக்கைகளால் இந்த மாவட்டத்தில் காலாகாலமாக வசித்து வரும் சிறுபான்மையினரின் இனப்பரம்பலை வலுவிழக்கச் செய்யும் திட்டங்கள்; 1948ல் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு கச்சிதமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 
வடக்கு கிழக்கு மாகாணம்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்; எனும் கோட்பாட்டை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறான இனவாத நெருக்குதல்கள் மாறிமாறி ஆட்சியில் அமரும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட கடந்த 55 வருடங்களாக தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த எந்த ஒரு அரசாங்க அதிபரும் இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்படவில்லை. இவ்வாறான எழுதப்படாத ஒரு சம்பிரதாயம் எல்லா அரசாங்கங்களாலும் தெடர்ந்து பேணப்பட்டு வருகின்றது. அம்பாறை நகரில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வர்த்தகம் செய்வதற்கான இடஒதுக்கீடு கூடகிடையாது. இத்தனைக்கும் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் தமிழ் பேசும் இரு சமூகத்தினருமேயாகும். நமது நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களின் தலைநகரங்களில் இவ்வாறான கட்டுப்பாடுகள் கிடையாது.

 
இவைபோன்ற இன, மத ரீதியான இறுக்கமான பாகுபாட்டு மனப்பாங்கினாலான தொடர் நடவடிக்கைகளினால்தான் கிழக்கு கடலோரங்களில் குறுகிய எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்புள்ள கிராமங்களுக்குள் தமிழ் பேசும் இரு சமூகத்தினரும் படிப்படியாக தற்போது ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள்;. இதுபோன்ற ஆபத்தான பின்புலத்தை உணர்ந்துதான் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி முஸ்லிம்களின் வாக்குப்பலத்தைத் திரட்டுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்.

 
நாட்டில் முஸ்லிமகள்; பாரம்பரியமாக பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் ஒரேயொரு மாவட்டத்தில் அவர்களது நில உரிமையையும் இறைமையையும் தனித்துவ அடையாளத்தையும் மதகலாச்சார விழுமியங்களையும் அரசியல் யாப்புரீதியாக பாதுகாத்துக்கொள்வதே அவரது முதன்மை நோக்கமாக இருந்துவந்தது.
எல்லைக் கிராமங்களைப் பலப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு தனது அமைச்சில் கடமையாற்றிய இணைப்பாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கிவந்தார். இறக்காமம் என்ற ஒரு எல்லைக் கிராமத்துக்கு ஹெலிகொப்டரில் வருகைதரும் வழியில்தான் அவர் தனது இறுதி மூச்சையும் விடநேர்ந்தது.

 
1961ம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து புதிய அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது அயல் மாவட்டங்களின் நிலப்பரப்பையும் அதில் வசித்த பெரும்பான்மையின மக்களின் தொகையினையும் புதிய மாவட்டத்துடன் இணைத்ததன் மூலம் நம்மை நமது மண்ணில் சிறுபான்மையினராக மாற்றும் கைங்கரியம் வெளிப்படையாகவே நிறைவேற்றி வைக்கப்பட்டது.

 
சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னர் 1952ல் எடுக்கப்பட்ட கணிப்பின்படி நமது பிரதேசத்தில் 3119 சிங்கள வாக்காளர்கள் மட்டுமே பதியப்பட்டிருந்தனர். அதேவேளை 42,000 முஸ்லிம்களும் 24,000 தமிழர்களும் இங்கு இருந்துள்ளனர்.
அதன் பின்னர் 1971இல் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி சிங்களவர்களின் தொகையானது 30வீதமாகப் பெருகியும் அதேவேளை முஸ்லிம்களின் தொகையானது 46.2வீதமாகவும் தமிழர்களின் தொகையானது 21வீதமாகவும் குறைந்து காணப்பட்டன. சிங்களவர்களின் தொகையானது 500 வீதமாக பெருகியிருந்தது.
பின்பு 1981ல் எடுக்கப்பட்ட கணிப்பீட்டில் சிங்களவர்களின் தொகை மேலும் 7வீதத்தால் அதிகரித்திருந்த அதேவேளை முஸ்லிம்களின் தொகை 5வீதத்தாலும் தமிழர்களின்; தொகை 2வீதத்தாலும் குறைந்திருந்தன.
திட்டமிட்டு அரச உதவியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையின மக்களின் குடியேற்றம், அவர்களது தேவைகளை நிறைறே;றுவதற்காக உள்ளுர்வாசிகள்மீது திணிக்கப்பட்ட நில அபகரிப்புதிட்டம்கள், மத, இன ரீதியான தொடர் பாகுபாடுகள் என்பனவே இந்த படிமுறையான மாற்றங்களுக்கான முக்கிய காரணிகளாகும்.

 
1986ம் ஆண்டு புதிய பிரதேச சபைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு புதிய எல்லைகள் வகுக்கப்பட்டபோதும் நமது முஸ்லிம் பிரதேசசபை எல்லைகள் ஒருதலைப்பட்சமாக சுரண்டப்பட்டன. 6இல் 5 வீத பெரும்பான்மையினை கொண்ட N;;ஜ.ஆரின் அன்றைய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையாக இந்த கைங்கரியம் நமது மக்கள்பிரதிநிதிகளின் ஆதரவுகளுடனேயே நிறைவேறியது.
தற்போதைய 2012ம் ஆண்டு கணிப்பின் படி அம்பாறை மாவட்டத்தில் 38.72 வீதமாக உள்ள சிங்களவர்கள் 71.44 வீத நிலப்பரப்பையும், 15.83 வீதமாக உள்ள தமிழர்கள் 7.35வீத நிலப்பரப்பையும் 43.83வீதமாக உள்ள முஸ்லிம்கள் 19.39வீத நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளனர்.

 
ஆகவேதான் எம்மைச்சுற்றி; தொடர்ந்து ஏற்பட்டுவரும் இவ்வாறான நெருக்குவாரங்களில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால்; நமது மறைந்த தலைவர் முன்வைத்த தனி மாவட்ட மற்றும் தனிமாகாண கோரிக்கைகளை பெறுவதற்கான உரிமைப் போராட்டத்தை முதன்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நமது சொந்த கட்சி சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடும் உரிமையையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது பின்சந்ததிகள் கரையோர மாவட்டத்தினை கடலுக்குள்தான் சென்று தேடவேண்டிவரும்
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தனி தேசியம் என்பதை நிறுவுவதற்கு ஏதுவான நிலத்தொடர்புள்ள அரசியல் அடையாளம்; கிழக்கில் மட்டும்தான் உள்ளது. எனவேதான் அந்த பலத்தை இல்லாமல் செய்வதற்கான சதியினை ஒவ்வொரு அரசாங்கத்திலும் உள்ள சக்திவாய்ந்த பெரும்தேசிய கடும்போக்கு வாதிகள் கிரமமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட தலைவராக அஷ்ரப் மிளிர்ந்தார். அதனால்தானோ என்னவோ மர்மமான முறையில் அவர் மறைக்கப்பட்டார். அவரது மறைவு பற்றிய மர்மமும் துலங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 
தற்போது அம்பாறையில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள 12,000 ஹெக்டயர் நிலத்துக்கான உரிமைப் பிரச்சினையானது தலைவர் அஷ்ரஃப்பின் காலத்திலும் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்ட தொன்றாகும். அன்று அக்கோரிக்கையை முன்வைத்த ஒரு மதகுருவை நேருக்கு நேர் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தைரியமாக சந்தித்து போதிய விளக்கங்களைக் கொடுத்து நமது தரப்பை நியாயப்படுத்தி அவர்களுக்கான நிலஉடமைக்கான எல்லையை உறுதிப்படுத்தித் தந்தார். நில அளவையாளர்களைக் கொண்டு எல்லை கல்களையும் போட வைத்தார். 23-1-2008 ல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி 585 ஏக்கர் நிலமே அவர்களின் தற்போதைய உடமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 
தலைவரின் மறைவுக்குப் பின்னர் அவரது வழிகாட்டல்கள் எல்லாமே இன்று தலைகீழாக மாறிவிட்டன. எல்லைக் கற்கள் தூக்கி எறியப்பட்டு இன்று அஷ்ரஃப்-நகர் எனும் கிராமம்கூட பாதுகாப்புப் படையினரால முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கட்டவிழ்த்துப்படும் இவ்வாறான அராஜக சம்பவங்கள் பற்றி அரசியல் பிரதிநிதிகளிடம் கிராமவாசிகளால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் அபிவிருத்திக்கல் நாட்டும் வைபவங்களாலும் வீதி அமைப்புப் பதாதைகளாலும், பள்ளங்களில் மண் நிரப்பும் பணிகளாலும் அடிக்கடி நடாத்தப்படும் பாரிய விழாக்களாலும் மூடி மறைக்கப்பட்டு விட்டன. இன்று மீண்டும் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையினால் புதிய நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரமிக்க ஒருவரினால் முன்பு அஷ்ரஃபினால் புதைக்கப்பட்ட பூதம் மீண்டு வெளிவந்துள்ளது.

 
இத்தனைக்கும் இன்றைய பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் அதிகாரமிக்க அமைச்சர்களும் நல்லாட்சியில்தான் தங்களது ஆசனங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எல்லாரும் வௌ;வேறு அணிகளாகப் பிரிந்து நின்று ஒருவர் செய்யும் தவறை மற்றவர் கண்டு பிடித்துத் தோலுரித்து வன்மம் தீர்க்கும் நோக்குடன் தங்களைத்தாங்களே கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கண்காணிப்புக்களை நமது சமூகத்தின் எதிர்ப்புச் சக்திகள் மீது ஒரு முகமாகத் திருப்பியிருந்தால் எமது பிரச்சினைகள் என்றோ தீர்ந்து போய்விட்டிருக்கும்.

 
இதேவேளை நமது சகோதர தமிழ் சமூகமானது பாராளுமன்றத்தில் எதிர்தரப்பில் இருந்துகொண்டே மின்னாமல் முழங்காமல் அதன் கவனங்களை ஒருமுகமாக இலக்குகளை நோக்கித் திருப்பி, ஒருங்கிணைந்த அழுத்தங்களைப் பிரயோகித்து பறிபோன தங்களது ஆயிரக்கணகான ஏக்கர் நிலம்களை மீட்டு வருகின்றனர்;. ஆனால்; நாம் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்துகொண்டு கையில் இருப்பதையும் இழக்கும் நிலைமைக்குள் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம்.

 
மாயக்கல்லிமலையில் சிலை வைப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் இணைத்தலைவரிடம் அனுமதியினை தான் பெற்றுக்கொண்டதாக தனது தரப்பை நியாயப்படுத்தும் நோக்குடன் அரசாங்க அதிபர் ஒரு பழியைச் சுமத்திய விடயம் மிகவும் இலேசாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் மர்மம் மூடிமறைக்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி எழுகின்றது. மாவட்டசபை இணைத்தலைவர் மீது அரசாங்க அதிபரால் பகிரங்கமாக இப்படியான ஒரு அபாண்டம் சுமத்தப்பட்டது உண்மையானால் அது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

 
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வீடியோ கமராக்கள்; மூலம் பதிவுசெய்யப்பட்ட சிலை விவகாரம்பற்றி தமக்கு எதுவவுமே தெரியாதென்றும், ஆனால் யார் எங்கு சிலை வைத்தாலும் அதற்கு பணஉதவி செய்து வரவேற்பேன் என்றும் அவ்வாறு நிறுவப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தினால் நான் எனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்ததன் மூலம் அமைச்சரவர்கள் தான் எதிர் காலத்தில் இவ்வாறான செயல்களுக்கு இன்னும் வேகமாக தனது ஆதரவினை வழங்கி ஒத்தாசை புரியப்போவதாகவேறு எதிர்வுகூறியுள்ளார். இந்தக்கூற்றானது ஆபத்தான ஒரு எதிர்காலத்தை அம்பாறை மாவட்ட சிறுபான்மை சமூகங்கள் சந்திக்கப் போகின்றன என்பதனைக் கட்டியம் கூறுகின்றது.

 
சென்ற வருடத்தின் பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்காக ஐ.தே.க தலைமையகத்துக்கு சென்றிருந்த எமது வேட்பாளர்களை இதே அமைச்சர்தான் மிகவும் கேவலமான முறையில் திட்டித்தீர்த்தது மட்டுமல்லாமல் தங்களது காரியாலயத்திலிருந்து உடனே வெளியேறுமாறும் அநாகரிகமாக எம்மைப் பணித்தார்;. குறிப்பிடப்படும் இந்த அமைச்சர் அவரின் கட்சிக்கு கட்டுப்படாமல் நடக்கும் துணிவுள்ளவர். நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியானது நமது கட்சிசார்ந்த எந்த விவகாரம் பற்றியும் அவரிடம் விசாரணை செய்யப்போவதில்லை.

 
நமது தனித்துவத்தையிழந்து ஐ.தே.க. வுடன் நாம் இணைந்து போட்டியிட்டதனால் நன்மையடைந்தவர் நம்மையெல்லாம் கடலுக்குள் ஒதுக்கித் தள்ள முனையும் இந்த அமைச்சர்தான். மு.கா. தனித்துப் போட்டியிட்டிருந்தால் மாவட்டத்தில் அவர்கள் படுதோல்வியடைந்திருப்பார். அதுமட்டுமல்ல கரையோர மாவட்டம் ஒன்று வேறாக இருக்கும் பட்சத்தில் தனது தொகுதியில் அவர் என்றும் தொடர்தோல்வியை காண்பவராகவே இருப்பார். மொத்தத்தில் பொல்லைக் கொடுத்து அடி வாங்கும் வங்குரோத்து அரசியலை நாம் மாறிமாறி செய்து கொண்டிருக்கின்றோம். ஆளும் தரப்பில் தொடர்ந்தும் இருப்பதைத் தவிர வேறு எந்த இலக்கையும் நாம் அடைந்ததில்லை.

 
எனவேதான் முஸ்லிம்களின் நிலத்தொடர்புள்ள அரசியல்தளம் என மறைந்த தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட கரையோர மாவட்டமும் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமும் நமது வேலைத் திட்டங்களில் உடனடியாக முதன்மைப் படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு ஒழிவுமறைவுமின்றி வார்த்தை ஜாலங்களால் மூடிமறைக்கப்படாமல் மறைந்த தலைவரின் இந்த யோசனைகள் தீர்வுத்திட்டத்தில் பிரதானமானதாக முன்மொழியப்பட வேண்டும். சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தலைவர்களையும் கட்சிகளையும் வழிநடத்திய சமூகம் மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.

 
நமது மண்ணையும் நமது மரபுகளையும் முதன்மைப் படுத்துவதற்கு தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். மனம் விட்டுப் பேசி எமது பிரச்சினைகளுக்கு நாமே விடை காண வேண்டும். இல்லாவிட்டால் குரங்கிடம் அப்பம் பங்கிடக் கொடுத்த பூனைகளின் நிலைதான் நமக்கு ஏற்படலாம்.
மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றும் வேண்டுகோளை தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளிலிருந்து விடுபட்டு சகலரும் இணைந்து விடுக்க வேண்டும்.
காருண்யம் சகிப்புத்தன்மை, பரிசுத்த அன்பு என்பனவற்றைப் பற்றி போதித்த பத்த பெருமானின் சிலையினை ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காண்பிக்க முனையும் அராஜகத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.

 
ஆகக்குறைந்த பட்சம் முஸ்லிம்கள் அனைவரும் தமது அமைதியான எதிர்ப்பை நாடளாவியரீதியில் அரசாங்கத்துக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒருமித்து தெரிவிக்க முன்வர வேண்டும்.
பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் மட்டும்தான் கல்முனை கரையோர மாவட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் பிரகடனம் வெளியிட்டுள்ளார்.
கரையோர மாவட்டமும், முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமும் இல்லாத எந்த ஒரு அரசியல் தீர்வையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் துணிந்து நின்று முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனத்தை வெளிப்படுத்த முன்வராதவர்களை முஸ்லிம் வாக்காளர்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும்.

 
கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்ட பொம்மைகளின் அரசியலை இனியும் நாம் தொடர வேண்டுமா என்பதனை மிகவும் காத்திரமாகவும் கனதியாகவும் நாம் இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நமது அரசியல் தனித்துவத்தை கட்சியின் சின்னத்தில் வெளிக்கொணர்வதன் மூலம் மட்டும்தான்; பேரினவாத கட்சிகளின் பிரயோசனம் இல்லாத அரசியல் ஊடுருவல்களை எமது பிரதேகங்களிலிருந்து தடுத்து கொள்ள முடியும். எமது முஸ்லிம் வாக்காளர்கள் இலகுவில் பேரினவாத அரசியலுக்கு விலை போய் விடுவதற்கான சந்தர்ப்பங்களை நாமே ஏற்படுத்திக் கொடுக்கும் கலாச்சாரம் மூலம் பல இழப்புக்களை சந்தித்தது போதும்.

 
மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் நிறுவப்பட்ட சிலையினை அகற்றுவதற்கான அழுத்தத்தினை அரசாங்கத்தின் பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம் நாட்டில் தற்போது மையம்கொண்டுவரும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச்சுழியின் தாக்குதலுக்கு அரணிடுவோம். செய்வீர்களா?
அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தால் மட்டும்; போதாது, அரசாங்கத்திலிருந்து எமது உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளிலும் நீங்கள் ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைந்த பங்காளிகளாக மாறவேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

M T Hasen Ali  MP
Secretary General
Sri Lanka Muslim Congress
Former State Minister