பெளத்த மக்களை கோபப்படுத்தும் விதமாக கருத்துக்களை வெளிப்படுத்தி சிங்கள –- முஸ்லிம் சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்த முயன்றார் எனும் குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராஸிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார்.
பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவின் சிறப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக நேற்றுக் காலை மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அப்துர் ராஸிக்கிடம் அங்கு நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து சிங்கள –- முஸ்லிம் சமூகங்களிடையே மோதலைத் தூண்டும் வண்ணமும் பெளத்த பக்தர்கள் ஒரு தொகுதியினரின் மதிப்புக்குரிய மதகுருமார்களை இழிவாகப் பேசியும் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அப்துர் ராஸிக் நேற்று பிற்பகல் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது சிறப்பு விசாரணை அறிக்கையை மன்றில் வழங்கிய பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி மாளிகாவத்தையில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேக நபரால் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பகிரங்கமாக பேசப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் சந்தன கலங்சூரிய சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
பொலிஸார் சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் நாமசிறிரத்னவும் ஆஜராகினர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் பிணை நிபந்தனைகளை மீறவில்லை. பௌத்த மதத்தை இழிவாகப் பேசவில்லை. ஞானசார தேரர் என்ற தனிநபருக்கு எதிராகவே பேசினார்.
எனவே பிணை நிபந்தனையை மீறினார் என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டது அநீதியாகும்.
இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் துணைச்செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் தெரிவித்தார்.
செயலாளருக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனை அடுத்த மதங்களை இழிவாகப் பேசக்கூடாது என்றே தெரிவிக்கிறதே ஒழிய தனி மனிதனுக்கு எதிராக பேசக்கூடாது என்று தெரிவிக்கவில்லை.
ஜி.எஸ்.பி. சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக்கூடாது என்றே நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இது எமது உரிமைக்கான ஆர்ப்பாட்டமாகும். இந்த ஆர்ப்பாட்டத்தைச் செய்தால் நாம் அவர்களை அடிப்போம், விரட்டுவோம், கொல்லுவோம் என சவால் விட்டது பொதுபலசேனா அமைப்பேயாகும்.
சமூகத்துக்கோ, சமயத்துக்கோ எதிராக எவரும் பிரசாரம் செய்தால் அதை எதிர்ப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செயற்படுகிறது. ஒருவர் உரிமையில் இன்னொருவர் தலையிட முடியாது.
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரும் பிணை நிபந்தனைகளின் கீழே விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் குர்ஆனையும் முஹம்மது நபியையும் அவமதித்துப் பேசினார்.
வெறுப்புணர்வு பேச்சு பேசக்கூடாது எனும் பிணை நிபந்தனைகளின் கீழே அவர் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றிலிருந்து வெளியேறிய அவர் வெளியே வந்து மீண்டும் குர்ஆனை அவமதித்துப் பேசினார். அது தொடர்பாக அவருக்கு எதிராக மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த அரசாங்கம் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கிறது என்றார்.