சிலைவைத்ததாலும் ஒன்றுதான், சமூகத்திற்கு உலைவைத்தாலும் ஒன்றுதான்..!!

அன்று நடந்ததுதான்.. இன்றும் நடக்கிறது..

முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்கு முன் முஸ்லிம்கள் ஐ..தே.க., சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழரசு கட்சி போன்றவற்றில் பாராளுமன்ற பிரதிநிதிகளாக இருந்து வந்தனர்;. முஸ்லிம்கள் தங்களது தேவைகளை அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பா.உ.கள் மூலம் பெற்றுக்கொண்டனர். 

காலத்துக்குக்காலம் இனக்கலவரங்கள், பள்ளிவாசல் தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புகள் என்பன மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரின கட்சி ஆட்சிக்காலத்தில் இடம் பெறும் போதெல்லாம் முஸ்லிம்களுக்கு தனியான கட்சியின் அவசியம் உணரப்பட்டாலும் அவை சாத்தியமாகவில்லை.

rauff hakeem

1954ல் காத்தான்குடியிலிருந்து கல்முனைக்கு வந்து புடவை வியாபாரம் செய்துகொண்டிருந்த ஆதம் லெவ்வை என்பவர் கல்லோயா அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கனரக வாகனமொன்றினால் மோதிக் கொல்லப்பட்டார். இந்த வாகனத்தின் சாரதி மென்டிஸ், உதவியாளர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் என்பவர். கல்முனைப் பொலிசார் இவர்களைக் கைதுசெய்ய சென்ற பொழுது கள்ளுக் குடித்த வெறியுடன் காணப்பட்டனர். சின்னவனும், மென்டிஸூம் பொலிசாருடன் கைகலப்புச் செய்தனர். சாரதி மென்டிஸ் கைது செய்யப்பட்டான். அவனது வாகனமும் கைது செய்யப்பட்டது. தப்பி ஓடிய சின்னவனும், அவனது சகாக்களும் அம்பாரைக்கு ஓடிச்சென்று, கல்முனை முஸ்லிம்கள் மென்டிஸை அடித்துக் கொன்றுவிட்டனர் என்ற வதந்தியை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாக, அம்பாரை சிங்களவர்கள் மல்வத்தை தொடக்கம் இங்கினியாகலை வரையில் குடியிருந்த முஸ்லிம்களை அடித்தும், கொன்றும், வீடுகளை சுட்டெரித்தும் அநீதியிழைத்தனர். 374 கடைகளும்,வீடுகளும், மூன்று பள்ளி வாசல்களும் நாசமாக்கப்பட்டதோடு முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். பிறந்த இடம் “கொண்டவட்டான்” என பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் பதியப்பட்ட பதிவுகள் உள்ளவர்கள் சம்மாந்துறையில் இன்றும் வாழ்கிறார்கள்.தற்போதைய சம்மாந்துறை பா.உ மன்சூரின் தாய் கூட கொண்டவட்டானில் பிறந்தவர் என்று பேசப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளால் தனிக்கட்சியின் அவசியத்தை உணர்ந்த எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் “முஸ்லிம் ஐக்கிய முன்னணி” என உதய சூரியன் சின்னத்தில் ஒருகட்சியை அப்போது பதிவுசெய்தார். அதன் செயலாளராக “வைச்சேமன்” எம்.எஸ்.ஹமீது அவர்கள் இருந்தார்கள். ஆனால் அது அப்போது மக்களால் நிராகரிக்கப்ட்டது.

1961ல் அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிந்தது. அதற்கு முன் மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வருமாறு:

ஆண்டு சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள்:
1946ல் 11850 101061 85375
1953ல் 31174 128556 105960

1961ல் அம்பாரைமாவட்டம் பிரிந்தபின் அம்பாரை மாவட்ட சனத்தொகை வருமாறு:

ஆண்டு சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள்
1963ல் 62160 49220 97990
1971ல் 82868 60152 123935
1981ல் 146371 78315 161481

அம்பாரை மாவட்ட சிங்கள வாக்காளர் தொகை முயல்வேகத்தில் அதிகரிக்க வைக்கப்பட்டு அம்பாரை மாவட்ட முஸ்லிம்களது வாக்காளர் தொகையை எட்டும் அளவுக்கு திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களது பல ஆயிரம் ஏக்கர் காணிகள் தீகவாபி, சீனிக் கூட்டுத்தாபனம் என்பவற்றை சாட்டாக காட்டி சுவீகரிக்கப்பட்டன.

இந்த அநீதிகளை பேரின கட்சிகளின் முஸ்லிம் தலைமைகள் கண்டும் காணாமல் இருந்ததனால்,1981ல் காத்தான்குடியில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற இஸ்தாபனத்தை மர்ஹூம் அஸ்ரப் இஸ்தாபிக்கின்றார். அதன்பின் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள “கனிபில்டிங்” தற்போதைய அல்தாப் ஹோட்டலில் மர்ஹூம் ஹூசைன் நீதிபதி அவர்களது தலைமையில் ஒரு காணிக்கச்சேரியை அஸ்ரப் நடாத்துகிறார். அதில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இழந்த, பறிகொடுத்த காணிகள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டன. அப்போது தற்போதயதைப்போல போட்டோக் கொப்பி பிரதி செய்யும் வசதி கிடையாது. நானும், விளையாட்டு விரிவுரையாளர் முஸ்தபா சேர், அஸ்ஸஹீத் பாலூன், சறூக் காரியப்பர் போன்றோர் காபன்பேபர் வைத்து உறுதிகளையும், பேமிட்டுகளையும் பிரதி எடுத்தோம். சீனிக் கூட்டுத்தாபனத்தால் மட்டும் சுமார் 8000 ஏக்கர் முஸ்லிம்களது காணிகள் பறிபோய் இருந்தன. 

இவைகளை எல்லாம் சுமந்தவராக அஸ்ரப் இருக்கும் போது தமிழ் பபயங்கரவாதம் நம்மை அடிமைப்படுத்தியது. பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ்லிம்கள் சார்பாக யாரும் இல்லை. இவை எல்லாவற்றையும் காரணமாக வைத்து மர்ஹூம் அஸ்ரப் முஸ்லிம்காங்கிரசை 1986ல் மக்கள் மயப்படுத்துகிறார். இக்கால கட்டத்தில் கல்முனைத் தொகுதியை ஏ.ஆர்.மன்சூர் அவர்களும், சம்மாந்துறை தொகுதியை மர்ஹூம் அப்துல் மஜீட் பீ.ஏ. அவர்களும், பொத்துவில் தொகுதியை மர்ஹூம் உதுமாலெப்பை அதிபர் அவர்களும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

காணிகளை பறித்த பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதி சோமரட்ன 1977க்கு முற்பட்டகாலம், 1977க்கு பிற்பட்ட காலம் ஐ.தே.க.வின் பி.தயாரெட்ன அவர்கள். இவர்களால் திட்டமிட்டு காலத்துக்குக்காலம் அம்பாரை மாவட்ட கரையோரத்தில் இருந்த அரச காரியாலயங்கள் அம்பாரைக்கு இடம்மாற்றப்பட்டன.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடைவதற்காக 1989ல் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களிடம் ஆணைகேட்டு நிற்கின்றார். பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பு, தேசியப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களது நலன், இழந்த காணிகளை மீளப்பெறல், அம்பாரைக்கு எடுத்துச்சென்ற அரச காரியாலயங்களை மீளபெறல் என மு.கா.வின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

மருதமுனையில் அத்தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம்; நடந்தது அந்த மேடையில் மர்ஹூம் அஸ்ரப், வபாபாறுக், ஹம்தூன் ஜீ.எஸ்., மர்ஹூம் நிஹ்மதுல்லாஹ், சட்டத்தரணி சறூக்காரியப்பர், சத்தார், மஹ்றிப், ஜவாத் ஆகியோர் அமர்ந்திருக்கின்றார்கள். நான் ஒலிபெருக்கி முன் நின்று பேசுகிறேன். எனது பேச்சில் கல்முனையில் இருந்த மாவட்ட தொழில் காரியாலயம், மாவட்ட கல்வி காரியாலயம் என்பன அம்பாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவைகளை மீண்டும் நமது பகுதிக்கு எடுத்துவர ஆணைவழங்குங்கள் என்று பேசினேன். மக்கள் ஆணை வழங்கினார்கள் அஸ்ரப் சுமார் மட்டும் 61000 வாக்குகளால் எம்.பி. ஆகினார்.

தனித்துவமான கட்சியின் தனித்துவ தலைவராக அஸ்ரப் பாராளுமன்றில் அசத்தினார். வரவுசெலவு விவாதத்தின் ஒவ்வொரு அமைச்சுக்கான விவாதத்தின்போதும் நாங்கள் தரவுகளை தடயங்களை தேடி அனுப்புவோம் அவர்
பேசுவார். அப்போது முஸ்லிம்களது தனித்துவ குரல் பாராளுமன்றில் தொடர்ந்து ஒலித்தது. 

1994ல் நடந்த பொதுத் தேர்தலில் மு.கா.வின் தனித்துவம் இழக்கப்படுகிறது. அஸ்ரப் பாராளுமன்ற கதிரைகளை அதிகரிப்பதற்காக பேரின கட்சியில் இணைந்து தேர்தலில் நிற்கிறார். ஆசனம் அதிகரிக்கின்றது, அமைச்சர்களாகிறார்கள். 1981ல் காணிக்கச்சேரி நடாத்தி பெற்ற தரவுகள்,தகவல்கள் எதுவுமே கணக்கிலெடுக்கப்படவில்லை. துறைமுகத்தில் தொழில், கோட்டா, கொந்தராத்து, வாகனம், பங்களா வசதிகள் கட்சியின் போக்கு திசை மாறுகிறது.

சந்திரிக்காவின் ஆட்சியை தனது ஒரு பிரதிநிதித்துவத்தால் தக்கவைக்கிறார். அப்போது சந்திரிக்கா எதைக் கேட்டாலும் கொடுத்திருப்பார். கல்முனை கரையோர மாவட்டம், இழந்த காணிகளை பெறல், அல்லது மாற்றுக் காணி பெறல், நஷ்டயீடு பெறல் எவ்வளவோ செய்திருக்கலாம். அதற்காக ஏதுமே நடக்க வில்லை என்று அர்த்தமல்ல.முன்னுருமைபடுத்தி செய்யவேண்டியவைகள் செய்யப்படவில்லை. 
காரணம் சமுக உணர்வோடு கட்சியை வளர்த்தவர்கள் அப்போது அவருடன் இல்லை. 

மர்ஹூம் அஸ்ரபின் அகால மரணத்தை தொடர்ந்து கட்சியின் தலைமையை தனது “நப்ஸி” ஆசைப்படுகிறது என்று கூறி ஹக்கீம் அடைகிறார். மர்ஹூம் அஸ்ரபின் பாணியில் அவரும் பேரினக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் குதிக்கின்றார். கட்சியின் தனித்துவம் முற்றாக இழக்கப்பட்டாகிற்று. 

1989க்கு முன் ஒவ்வொரு தொகுதி எம்.பி.யும் தான் சார்ந்த பெரும்பான்மை கட்சிக்கு சேவகம் செய்து மக்கள் சேவை செய்தனர். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் பேரினக்கட்சிகளுடன் சேர்ந்து அவர்களது சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம்களது வாக்கை மொத்த வியாபாரம் செய்து (தயாகமகே போன்ற) சிங்கள வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதோடு நாவிழந்து ஊமையாகி வாளாவிருக்கின்றது.

மர்ஹூம் அஸ்ரப் கல்முனைக்கு 19 வருடங்களுக்கு முன் கொண்டுவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அம்பாரைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள. மாதம் ரூபா பதினெட்டாயிரம் (18000/= ) வாடகைக்கு எச்.எம்.எம் ஹரிஸ் இன் சகோதரனின் கல்முனை ஜீ.எஸ்.லேனில் இயங்கிய நைட்டா(NAITA) காரியாலயமும் 15.11.2016ல் அம்பாரைக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் சாய்ந்தமருது “வெலிவேரியன்” வீட்டுத்திட்டத்தில் நைட்டா காரியாலயம் அமைக்க ஒரு ஏக்கர் ஒதுக்கியுள்ளார். அந்நிலம் தற்போதும் அப்படியே இருக்கின்றது. அதில் அதன் கட்டிடத்தை நமது பா.உ.கள் அமைக்கவில்லை. 

தற்போது அமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உரிய அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்களை சந்தித்து பேசி நைட்டா (NAITA) காரியாலயம் அம்பாரைக்கு செல்வதை இடை நிறுத்தியுள்ளதாக அறிகிறேன். அவர்களுக்கு நன்றிகள். இனியாகுதல் ஒதுக்கப்பட்ட காணியில் அதற்கான கட்டிடத்தை அமைப்பார்களா?
தற்போது கல்முனையில் வேறாக 40 பேர்ச்சஸ் ஒதுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. ஏற்கனவே ஒதுக்கிய இடத்தில் அதை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கலாமல்லவா?

தற்போது எங்கு வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாமாம்;. தயாகமகே நமது முஸ்லிம் வாக்குகளால், முஸ்லிம் கங்கிரசின் தப்பான அரசியல் வியூகத்தால் தப்பி பிளைத்தவர். அவர் கூறுகிறார். சிலையை அகற்றினால் அமைச்சர் பதவியை துறப்பாராம். அது அவரது சமூக விசுவாசம். அதை கேட்டுக் கொண்டு “எடுக்காவிட்டால் நாமும் துறப்போம்” என்று கூறாமலிருந்தது. “நக்குண்டார் நாவிழந்தார்” என்ற அடிமை விசுவாசம்.

விளையாட்டு கழக இளைஞர்கள் இனியாகுதல் சிந்திப்பார்களா? பந்துக்கும், மட்டைக்கும், நெற்றுக்கும் நாம் சோரம்போய் கமகேக்கும், மற்றவர்களுக்கும் போஸ்டர் ஒட்டியதன் விளைவு விளங்குகிறதா? கல்முனையும்,பொத்துவிலும் தீகவாபிக்கு சொந்தம் என்கிறார் கமகே. எங்குவேண்டு மென்றாலும் சிலைவைக்கலாம் என்கிறார்கள் நமது ஊமைக்கிளிகள். கச்சையை கழட்டினாலும் கவலையில்லை என கட்சித்தலைவர் சாதி, மதம் பாராமல் கச்சை கழட்டுகிறார். அவர்தான் மறுமைபற்றிய நம்பிக்கை இல்லாதவராச்சே.. டாக்டர் உதுமாலெவ்பை அவர்களே! நீங்கள்தான் இதற்கு சாட்சி. அவருக்கு சிலைவைத்ததாலும் ஒன்றுதான், 
சமூகத்திற்கு உலைவைத்தாலும் ஒன்றுதான்.சுளை சுளையாக கிடைத்தால் போதும்.

இவர்களது இந்த நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 
“ஹாறூத்”, “மாறூத்” என்ற இரு மலக்குகள் துனியாவை பார்க்க ஆசைப்பட்டு அல்லாஹ்விடத்தில் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அல்லாஹ் அவர்களை பூமிக்கு அனுப்பினான். பூமியை சுற்றிப்பார்த்த மலக்குகள் ஒரு இடத்தில் மதுவை கண்டனர். அதை அருந்தினர். போதை தலைக்கேறியதும் ஒரு மங்கையை கண்டனர் அவளுடன் சங்கமமாகினர் தவறை உணர்ந்து பக்கத்தில் இருந்த சிலையை கும்பிட்டு பிராயச்சித்தம் தேடினர். அல்லாஹ் அவர்கள் இருவரையும் உலகம் அழியும்வரை பூமியில் ஒரு பாழ்கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளான். நமது ஹாறுத், மாறூத்களும் பாராளுமன்றம் செல்ல விரும்பி குர்ஆன் ஹதீது எங்களது யாப்பு என்றனர். நாமும் அனுப்பினோம். அங்குசென்றபின் மதுவுக்கு ஆளாகினர்.மங்கையுடன் சங்கமமாகினர்.
தற்போது சிலைவைப்பது அவர்களது சம்மதத்துடன் என அதை ஆதரிக்கின்றனர். பாழ்கிணற்றில் தலைகீழாக தொங்க விடமுடியாது என்றாலும் பாராளுமன்றம் செல்லாமலாக்கலாமல்லவா?

1989க்கு முன் நடந்ததைவிட அதிகமாக பேரின ஆதிக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் பௌத்த பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போதைய நல்லாட்சியில் சர்வதேச சியோனிச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அன்று எதிர்க்க எதிர்க்கட்சி இருந்தது. இன்று அது கிடையாது. ஆதலால் அன்று நடந்ததுதான் இன்றும் நடக்கிறது..
கட்சி வந்ததால் காலம் கனியும் என சமுகம் எதிர்பார்த்தது. கண்டபலன் ஒன்றுமில்லை கண்ணே றஹ்மானே என்றாகிவிட்டது..

அன்று ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து நின்றான். இன்று ஆயிரம் செருப்புடன் சமூகம் எழுந்து நிற்கும்.

 நான் மேற்சொன்ன மருதமுனையில் 1989ல் இடம்பெற்றபொதுத்தேர்தல் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது.. 

15109437_605865416269212_7151794644453901981_n

ஹாஜி நஸீர்
கல்முனை.
16.11.2016