நல்லாட்சியிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. மாணிக்கமடு புத்தர்சிலை விவகாரம் பலவந்தமாக செயற்படுத்தப்பட்டது.
மேலும் மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் செயற்பட்ட விதம் போன்றவை எமக்கு கவலை அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இல்லையேல் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவது கடினம் என பிரதி அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வரவு –செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;
2017 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தின் போது கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு டெப் வழங்கும் விடயம் பாராட்டத்தக்க விடயமாகும்.
அதேபோன்று நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி அதிகளவில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். நல்லாட்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் நல்லாட்சியில் பாரியளவில் சீர்குலைவுகள் ஏற்படுகின்றன.
மாணிக்கமடுவில் பலவந்தமாக புத்தர் சிலை அமைக்கப்பட்ட விடயம் எமக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று அண்மையில் மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் செயற்பட்ட விதம் சிறுபான்மை இனத்தவர்களை அதிருப்திக்கு உட்படுத்தியுள்ளது.
சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்தில் பிரச்சினை உள்ளது. எனினும் அதனை பேசித் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மாறாக பலவந்தமாக செயற்படக் கூடாது என்றார்.