“ஆவா” குழு உருவாக்கியதில் அனைத்து இராணுவத்திற்கும் தொடர்புள்ளது எனக் கூறவில்லை: ராஜித்த

raajitha

“ஆவா” குழுவை உருவாக்கியதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்புள்ளது என நான் கூறினேனே தவிர, அனைத்து இராணுவத்திற்கும் தொடர்புள்ளது எனக் கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் இதனுடன் தொடர்புடையதாக கூறிய இராணுவ உயர் அதிகாரியின் பெயரை தான் குறிப்பிடவில்லை எனவும், எனினும் அந்தத் தகவலை உரிய இடத்தில் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் ராஜித்த சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, தனது கூற்று முழு இராணுவத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள ராஜித்த, பிரகீத் எக்னலிகொட, ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் லசந்த விக்ரமசிங்க ஆகியோரை கொன்ற மற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை இராணுவத்தினர் எனக் கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், இந்த நாட்டுக்கு தீவைத்தேனும் சிலர் அதிகாரத்தை பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.