அப்துல் பர்ஸாத்
நினைத்துப் பார்க்கும் போதே பெரும் வியப்பாக இருக்கின்றது. இது என்ன கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துத் தெளிவடைய வேண்டியுள்ளது. இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று என்று மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்கத் தோன்றுகிறது. 2005ம் ஆண்டில் தோற்றம் பெற்ற ஒரு கட்சி பத்து வருடங்களுக்குள் அடைந்துள்ள அபார வளர்ச்சி இன்று எல்லோரையும் அதிசயத்தில் ஆழ்த்தி நிற்கிறது.
2001ம் ஆண்டில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான அந்த இளைஞர் ஒன்றும் செல்வந்தப் பரம்பரையிலோ, அல்லது பெரும் கல்விமான்களைக் கொண்ட குடும்பத்திலோ பிறந்தவர் அல்லர். ஒரு நடுத்தரக் குடும்பத்தில், அதுவும் இலங்கையின் பின்தங்கிய ஒரு மாவட்டத்தில் பிறந்து, மிக்க கஷ்டங்களுடன் தன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த மிக இளவயதில் புலிகளின் அச்சுறுத்தலினால் அகதியாகி, இடம்பெயர்ந்து, சொல்லொணா வேதனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு, கஷ்டங்களையும் கவலைகளையும் சகித்தபடி உயர் கல்வி கற்றுப் பொறியியலாளராகி, மக்கள் சேவைகளில் மனம் விரும்பி ஈடுபட்டு, அதன் விளைவாக மக்களினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகி, அதன் பின்னர் நடந்த எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியே பெற்று, பிரதியமைச்சராகி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகி, மக்களுக்கெனத் தனியான கட்சி தொடங்கி, அதன் தலைவராகி, இலங்கை முழுதும் கட்சியின் அங்கத்தவர்களையும் ஆதரவாளர்களையும் பெற்றுப் பல இலட்சம் வாக்குகளைப் பெறுகின்ற ஆளுமையை அடைந்து, இன்று ஐரோப்பிய நாடுகளிலும் தனது கட்சியின் கிளைகளைத் திறந்து வைக்கின்றாரென்றால்…
அல்ஹம்து லில்லாஹ் என்று மிகச் சத்தமிட்டு அந்த வல்ல நாயனுக்கு நன்றி சொல்கிறார்கள், அவரைத் தம் இதயங்களில் ஏந்தி வாழும் அவரது ஆதரவாளர்கள். அதுமட்டுமல்ல, வெளிப்படையாகத் தமது காழ்ப்புணர்வுகளை அவரின் மேல் அள்ளி வீசுகின்ற அவரது எதிரிகள் கூட, உள்ளுக்குள் அவரைப் பற்றிய, அவரின் செயற்திறன் பற்றிய, அவரின் ஓய்ந்துவிடாத உற்சாகம் பற்றிய, சாய்ந்துவிடாத உறுதி பற்றிய உண்மையான கணிப்பீடுகளினால் மலைத்துப் போய் நிற்கிறார்கள்.
அவர் றிசாத் பதியுதீன். வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்; கைத்தொழில் வர்த்தக அமைச்சர். சத்திய தலைவர் என்று தம் ஆதரவாளர்களினாலும் அபிமானத்துக்குரியவர்களினாலும் அன்போடு அழைக்கப்படுபவர்.
இந்த வளர்ச்சி ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வரவில்லை. அவரது சிந்தனைகளும் தன்னலமற்ற அயராத சேவைகளும் சமூகத்தின் மீது கொண்ட அடங்காப் பற்றினால் அச்சமின்றித் துணிவோடு இயங்குகின்ற அவரது பண்புகளும் அடிமட்டத் தொண்டனையும் அன்பு காட்டி அரவணைத்துச் செல்கின்ற அந்த உயர் குணங்களும் கஷ்டங்களில் உழல்கின்ற அகதிகளுக்கும் மற்றும் வறுமையில் வாடுகின்ற மக்களுக்கும் மனமிறங்கிச் செய்யும் அந்த மகத்தான பணிகளுமே அவரையும் கட்சியையும் வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக முன்னேற வைத்திருக்கிறதெனக் கூறலாம்.
இன்ஷா அல்லாஹ்… இன்னும் மிகக் குறுகிய காலங்களுக்குள் இந்த நாட்டின் ஆட்சியைத் தீர்மானம் செய்கின்ற மிகப் பெரும் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவெடுக்குமென நிச்சயமாக நம்பலாம்.
அல்லாஹு அக்பர்!