தன் உயிரை துச்சமென நினைத்து வயிற்றில் வளர்ந்து வந்த சிசுவின் ஆரோக்கியம் பற்றி சிந்தித்த தாய்

karu jayasuriya daughter

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்ஜீவனி இந்திரா ஜயசூரிய தனது 40 ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்த இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் அந்த நாட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்திரா ஜயசூரிய புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திரா ஜயசூரிய தொடர்பில் இங்கிலாந்து நாட்டு ஊடகமொன்றில் கடந்த மார்ச் மாதம் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. குறித்த செய்தியில்,

முதலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அதற்கான சிகிச்சையை அவர் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவர் குணமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் வயிற்றில் 28 வாரங்களாக தனது இரண்டாவது குழந்தை இருந்த நிலையில் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு முன்கூட்டிய சிசேரியன் (சத்திரசிகிச்சை) மூலம் குழந்தையை பெற்றெடுக்கும்படியும், இதனைத் தொடர்ந்து புற்றுநோய்க்கு தீவிர சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குழந்தையின் நலனுக்காக அந்த தாய் அதனை ஏற்கவில்லை.

தனது குழந்தை நல்லமுறையில் பிறக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர் மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

தொடர்ந்து 33 வாரங்களின் பின்னர் அவர் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

இந்த நிலையிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குழந்தையை சிசேரியன் மூலம் பெற்றெடுத்து விட்டு சிகிச்சை செய்திருந்தால் இவரது உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தனது குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் இந்தத் தாய் இருந்துள்ளார்.

தனக்கு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதே இவருடைய எண்ணம். 

உலகில் உள்ள ஒவ்வொரு தாயும் தன்னை விட தனது குழந்தை மீதே அதிக கவனம் செலுத்துகின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இந்திரா ஜயசூரியவின் செயல் இருக்கின்றது.