மஹேலவின் நடை பயணத்தின் போது சேகரித்த 700 மில்லியன் ரூபாவினால் கராப்பிட்டியவில் புற்று நோய்ப்பிரிவு!

14731385_10154674614314600_4954742942164217563_nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் முயற்சியால், தென்பகுதி நகரான காலியிலுள்ள கராப்பிட்டிய மருத்துமனையில் புற்று நோய்ப்பிரிவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனைக்கு நிதி சேகரிப்பதற்காக வடக்கே பருத்தித்துறையிலிருந்து, தெற்கு தேவேந்திரமுனை வரை அவர் நடைபயணம் மேற்கொண்டார். 

அந்த பயணத்தின்போது அவரிடம் இலங்கை ரூபாய் 700 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் நிதியளித்திருக்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு மொத்தம் 750 மில்லியன் இலங்கை ரூபாய் நிதி திரட்டப்போவதாக மஹெல ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அவரது நிதி சேகரிப்பு தொடர்ந்து நீடிக்கிறது.

27 நாட்கள் நடந்து, சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்த மஹேல ஜயவர்தனவின் தலைமையில், புற்றுநோய் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் கண்ணீர் மல்க உரையாற்றிய மஹேல ஜயவர்தன, இருபது ஆண்டுகளுக்கு முன் தனது சகோரர் புற்று நோயால் உயிரிழந்ததை நினைவுக்கூர்ந்ததோடு ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து இனத்தவரும் வழங்கிய நன்கொடையாலேயே இந்த புற்றுநோய்ப்பிரிவு கட்டப்படவிருப்பதாக கூறினார். 

இனங்களையும், மதங்களையும் கடந்து செயற்பட்டால் இதைவிட நிறைய நன்மைகளை சாதிக்கலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே மஹேல தலைமையிலான குழுவினர் இதேபோன்றதொரு நடைபயணத்தின் மூலம் இலங்கையின் வடக்கே தெள்ளிப்பளையிலும் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொடுத்து உதவியிருக்கின்றனர்.