உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும்.
ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆசிரமங்களிலும், குழந்தைகள் காப்பகங்களிலும், சாலைகளிலும், சத்திரங்களிலும் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாலையில் அலைந்து திரியும் யாசகர்களும், வீதியில் உலாவரும் மனநிலை பாதிப்படைந்தவர்களும், குழந்தை தொழிலாளர்களும், விலைமாதர்களும் மலிவாக உருவாகுவதற்கு யார் காரணம்?
உறவுகள் என்பது பிரிந்து வாழ்வது அல்ல. அது மரணத்தை தவிர மற்றவைகளால் பிரிக்கமுடியாதவை. உறவுகள் என்பது வெட்டி வாழ்வது அல்ல. அது ஒட்டி வாழ்வதற்கு உருவாக்கப்பட்டது.
இதுதொடர்பான நபிமொழிகளை காண்போம்:
“இறைவன் அன்பை நூறாகப்பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. அது எந்த அளவிற்கு என்றால், மிதித்துவிடுமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டு கால் குளம்பைத் தூக்கிக்கொள்கிறது” என்று நபி (ஸல்) கூறிய தாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.
‘உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்வோரை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று உறவு குறித்து இறைவன் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)
“தம் வாழ்வாதரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவை பேணி வாழட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)
உறவுகள் என்பது இறையருளின் ஒரு அங்கம். அந்த உறவுகளை வீட்டிலிருந்து விரட்டியடிப்பது நற்குணத்தையும், இறையருளையும் வீட்டை விட்டு விரட்டியடிப்பதற்கு சமமாகும். இவ்வாறு உறவுகளை கொடுமைப்படுத்தியவர்கள் உலகில் நலமாக, வளமாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.
உறவுகளிடமிருந்து நமக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். ஆனால் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு உறவுகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்தால் உறவுகள் மேம்பாடு அடையும்.
உறவுகள் மேம்பட சில தியாகங்கள் செய்து தான் ஆகவேண்டும். அவை:
1. விட்டுக் கொடுக்க வேண்டும்.
2. இனம் புரியாத அன்பை பொழிய வேண்டும்.
3. தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
4. உறவுகளால் ஏற்படும் சிரமத்தை சகித்துக் கொள்ள வேண்டும்.
5. உறவுகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவிகள் புரியவேண்டும்.
6. அன்பளிப்புகளை தாராளமாக வழங்கிட வேண்டும்.
7. வாழ்த்துக்களை பரிவுடன் பரிமாற வேண்டும்.
8. மலர்ந்த முகத்துடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
9. மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
10. உறவுடன் என்றென்றும் உறவாடி வாழவேண்டும்.
முத்தான இந்த பத்து அம்சங்களையும் பேணி நடக்கும்போது உறவுகள் பிரிய வாய்ப்பில்லை. பிரிக்கமுடியாத உறவுகளாக அவைகள் மேம்படும். இவ்வாறு உறவுகளுடன் உறவாடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைப்பதுடன், உலக வாழ்வும், மறுவுலக வாழ்வும் சுவனமாக அமையும்.
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் புகமாட்டான்” என்பது நபி மொழியாகும்.
உறவுடன் ஒட்டிவாழ்பவன் சுவனவாசி என்பதை எந்தநாளும் நாம் யோசித்து செயல்பட்டால் நன்மைகள் பெறலாம்.