ஜெமீல், சிராஸ் இருதரப்பு பனிப்போர் அம்பாறையில் கட்சியை இல்லாமல் சிதைத்து விடும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

 

  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் இன்று பிரகாசித்துக் கொண்டிருப்போரில் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஜெமீல் (தலைவர் அரச வர்த்தக கூட்டுத்தாபனம்) மற்றும் சிராஸ் மீராசாகிப் (தலைவர் லங்கா அசோக் லேலன்ட் கம்பனி) ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகள் விரிவடைந்துள்ளன. இந்த விடயத்தை மறைத்துப் பேசத் தேவையில்லை.

rishad rizad jameel siraz

சிராஸ் மீராசாகிப் கட்சியிலிருந்து சிறிது காலம் தானாகவே ஒதுங்கியிருந்த நிலையில் மீண்டும் இணைந்து கொண்ட போதும் அவர்களிடையே ஓர் இணக்கமான போக்கைக் காண முடியவில்லை. இருவருக்கும் அமைச்சர் ரிஷாத் முக்கிய பதவிகளை வழங்கி உள்ள நிலையில் கூட அம்பாறை மாவட்டத்தில் கட்சிப் பணிகளை முன்னெடுப்பது என்ற விடயத்தில் இரு தரப்பினரும் பனிப்போர் பிரகடனம் செய்து கொண்டுள்ளனர். 

லங்கா அசோக் லேலண்ட நிறுவனத்தின் தலைமைப் பதவியை சிராஸ் மீராசாகிப் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றபோது, அதில் அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரான ஜெமீல் கலந்து கொள்ளவில்லை. சாய்ந்தமருதுவில் அரச வர்த்தக கூடடுத்தாபனத்தின் கிளை ஒன்றைத் திறக்கும் பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டார் என்ற நியாயமான காரணத்தால் இந்த விடயத்தை விமர்சனப் பொருளாக நாம் கொள்ள முடியாதுள்ளது.

அதேவேளை, சாயந்தமருதுவில் அரச வர்த்தக கூட்டுத்தாபன கிளை திறப்பு விழா நிகழ்வில் சிராஸ் மீராசாகிப் கலந்து கொண்டாலும் இவர்கள் இருவரும் (ஜெமீல்-சிராஸ்) நெருக்கமாக காணப்பட இல்லை. மனம் விட்டுப் பேசவும் இல்லை என்பதனை நன்கு அவதானிக்க கூடியதாகவிருந்தது.(காஸி நீதிமன்றில் விவாகரத்துப் பெற வந்த கணவன்- மனைவி போன்று மிக இறுக்கமாகவே காணப்பட்டனர்)

இவர்கள் இருவர்களிடையிலான பிரச்சினைகளுக்கு மூலகாரணங்கள் பலவாக இருந்தாலும் சிலதை சிலாகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் நிலைப்பாடும் இன்று இரண்டுபட்டதாகவே உள்ளது. ஜெமீலின் கை அங்கு ஓங்கியிருப்பதால் சிராஸ் மீராசாகிபுக்கு அங்கு தளம்பல் நிலை காணப்படுகிறது என்ற விடயம் உண்மைதான். இவர்கள் இருவரும் ஒரே ஊரையும் ஒரே வட்டாரத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சாய்ந்தமருது மத்திய குழுவின் நிலைப்பாடு இரண்டுபட்டதாகவே காணப்படுகிறது. ஒரு குழுவில் சமபலம் கொண்ட இரு சண்டியர்கள் இருக்கக் கூடாது என்பது பாதாள உலகத்தினரின் கொள்கை. இன்று அந்தக் கொள்கையானது அரசியலிலும் பொது விதியாகி போய்விட்டது.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் விசேடமாக, கல்முனைத் தொகுதியில் கட்சிப் பணிகளை முன்னெடுப்பதில் பாரிய தடங்கல்களையும் சவால்களையும் கட்சியின் தலைமை எதிர்கொள்ளும் சாத்தியம் உருவாகலாம். இரண்டு மகாசக்திகளுக்கிடையிலான இந்தப் பனிப்போரானது அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை நிச்சயமாக பின் தள்ளும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமான நிலைமை பிறருக்கு ஏற்படலாம்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தனக்கு ஆதரவான பிரசார நடவடிக்கைகளில் ஜெமீல் ஈடுபடவில்லை. அவர் கொழும்பிலேயே காலம் கழித்தார் என சிராஸ் மீராசாகிப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் தன்னை மீறி சிராஸ் மீராசாகிப் கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார் என்ற ஜெமீலின் குற்றச்சாட்டும் இன்று சாணை தீட்டிய கத்திபோல் கூர்மை பெற்றுள்ளன. 

இந்த நிலைமையானது கட்சியைக் கூறு போடும் நிலைமைக்கே நிச்சயம் இட்டுச் செல்லும்.
பிரதேச ரீதியாக ஒரு கட்சியின் பணிகளை முன்னெடுப்பதற்கும் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் குறித்த கட்சியின் பிரதான தலைமையை கட்சியின் விட உள்ளுர் முக்கியஸ்தர்களின் கூட்டுப் பங்களிப்பே மிக அவசியம் என்பது தெளிந்து கொள்ளப்பட வேண்டும்.

எனவே, இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக தலையிட்டு சாய்ந்தமருது மத்திய குழு முன்னிலையில் இவ்விவகாரத்துக்கு தீர்வு காண்பது அவசியம். இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதில் பிரதியமைச்சர் அமீர் அலியின் பங்களிப்பு இன்றியமையாதது.

இதேவேளை, இவர்கள் இருவரின் பிரச்சினைகளை மையப்படுத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காய் நகர்த்திச் செல்கிறார் என்ற ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு இன்று சுமத்தப்பட்டுள்ளது. இது மிகத் தவறான கணிப்பு. கடந்த காலத்தில் இவர்கள் இருவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட பிரயத்தனங்களை தனிப்பட்ட முறையில் நான் அறிந்துள்ளேன்.

பாடசாலை அதிபருக்கு முன்பாக கைகட்டி நல்ல பிள்ளைகளாக, அவர் சொல்வதனை எல்லாம் கேட்டு தலையசைத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், அதிபர் வெளியே போய்விட்டால் சண்டையிட்டுக் கொள்வதற்கு அதிபரைக் குற்றம் கூறமுடியாது அல்லவா?

இறுதியாக, எதிர்காலத்தில் வரக் கூடிய தேர்தல் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தால் அதற்கான காரணமாக ஆதரவாளர்களைக் குற்றம் சொல்லும் தகுதி எவருக்கும் இல்லாமல் போய் விடும். தோல்விக்கான முழு உரிமையையும் கட்சி முக்கியஸ்தர்களே பொறுப்பேற்க வேண்டும்.