பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் அநீதியானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வரலாற்றில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு கோப் அறிக்கை தொடர்பிலும் பிணை முறி சம்பவம் தொடர்பிலான கோப் அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சிலர் பிரதமர் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பிரதமரோ அல்லது அரசாங்கமோ முயற்சிக்காது.
அறிக்கையை துரித கதியில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க பிரதமர் எடுத்த தீர்மானத்தின் ஊடாக இந்த விடயம் தெளிவாகின்றது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் கூறியுள்ளார்.