பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுகத்தில் காலாவதியான கப்பல்களை உடைக்கும் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது.
பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு எண்ணை கப்பலின் டேங்கரை கியாஸ் வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கப்பலின் ஒருபகுதி திடீரென்று வெடித்து சிதறியது. இதைதொடர்ந்து, அடுத்தடுத்தும் வெடிச் சத்தம் கேட்டது.
இந்த விபத்தில் சிக்கி பத்து தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரிப், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறும் டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.