அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்:இஷாக் எம்.பி

 

 

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே இதனை சாதிக்க முடியுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அனுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

unnamed-1

மக்கள் காங்கிரஸின் உதவியின் மூலம் புத்தளத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இஷாக் எம்.பி உரையாற்றினார்.

1947 – 1989 ஆம் ஆண்டு வரை புத்தளம் தேர்தல் தொகுதிக்குப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்தது. அந்தக் காலங்களில் இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்தனர். அத்துடன் பாராளுமன்றத்தில் அவர்கள் உயர் பதவியையும் வகித்து, நாட்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்றதோடு, புத்தளம் வாழ் மக்களுக்குப் பெருமைப் பெற்றுத் தந்தனர்.

1989 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. கட்சிகளையும், ஆட்களையும் புத்தளம் மக்களாகிய நீங்கள் முதன்மைப்படுத்தி, ஒற்றுமையின்றி செயற்பட்டதனாலேயே இந்த நிலை ஏற்பட்டது. 

unnamed-2

மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்கள் கஷ்டங்களை உணர்ந்த காரணத்தினால்தான், கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தைப் புத்தளத்துக்கு வழங்கினார். தான் சார்ந்த அகதி சமூகமான வடக்கு முஸ்லிம்களை இன்று வரை நீங்கள் வாழவைத்துக் கொண்டிருப்பதினால், அதற்கு நன்றிக்கடனாக அவர் இந்தப் பதவியை உங்களுக்கு வழங்கி உங்களை கௌரவப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ஏற்பட்ட ஏச்சுக்கள், அவமானங்கள் மற்றும் விமர்சனங்களை நீங்கள் அறிவீர்கள். 

எதிர்காலத்தில் நீங்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் இலகுவாக ஒரு பாராளுமன்றப் பிரதிநித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுராதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அமைச்சர் றிசாத்தின் சரியான வழிகாட்டல்களாலும், இறைவனின் உதவியினாலுமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தது. தேர்தலுக்கு முன்னர் மிகக் குறுகிய காலத்தில் அனுராதாபுர மாவட்டத்தில் சிறுபான்மையினரான நாம், ஒற்றுமை பட்டதன் விளைவாகவே சரித்திரம் படைத்தோம். இலங்கையின் சரித்திரத்தில் இந்த வெற்றியானது ஒரு சாதனையாகப் பதியப்பட்டுள்ளது. இந்த உணர்வு உங்களுக்கும் வரவேண்டும்.     

புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்மைய காலங்களில் இங்கு அரசியல் செய்தவர்கள், அபிவிருத்தியில் எந்தவிதமான கரிசனையும் காட்டவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் இந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, மக்களின் துயரைத் துடைக்குமென நான் உறுதியாகக் கூறுகின்றேன் என இஷாக் எம்.பி தெரிவித்தார். 

ஊடகப்பிரிவு