ஹக்கீம் அமானிதத்தை பாதுகாக்க தவறிவிட்டதானது இயலாமையா? அல்லது நம்பியிருக்கின்ற சமூகத்துக்கு செய்கின்ற துரோகமா?

12032957_1727612744138733_6280911070326785457_n_fotor_collage_fotor-300x225

வடமாகாண அகதிகள் மீதான அலட்சியம் முஸ்லிம் தேசியத்திற்கு ஹக்கீம் செய்கின்ற துரோகமாகுமா என்று வடமாகாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட ஈனச்செயல் நடந்தேறி இருபத்தாறாவது வருட நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில் எம். ஏ. கலீலுர் ரகுமான், சிரேஷ்ட விரிவுரையாளர் அவர்கள் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கனவான “முஸ்லிம்களுக்கான தனித் தேசிய அரசியல் இயக்கம்” ஹக்கீம் அவர்களால் வலுவிழந்து வருகின்றது என்றும் ரிஷாத் அவர்களால் வலுபெற்று வருகின்றது என்றும் தெரிவித்தார்.

எமது தாய் நாடான இலங்கை பல வகையான இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட கடலால் சூழப்பட்ட அழகிய நாடாகும். விருந்தோம்பல் ஒழுக்கம் புத்தி சாதூர்யம் போன்ற உயரிய பண்புகளை கொண்ட பல்லின சமூகங்களையும் அந்தச் சமூகங்கள் சார்த்ந்த பல்வேறுபட்ட கலாச்சார விழுமியங்களையும்  கொண்ட சிறப்பு மிக்க இந்த நாடு, அதன் வளங்களையும் அழகையும் நாடி படையெடுப்புகளை மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் ஆக்கிரமுப்புகளுக்கு உட்பட்டு பின்னர் அவர்களின் ஆட்சியில் பலநூறு வருடங்களாக சொந்த நாட்டிலேயே இந்த பல்லின சமூகங்களும் அடிமைகளாக்கப்பட்டு அடக்கி ஆளப் பட்டனர். அந்த அடிமை வாழ்கையில் சலிப்படைந்து தமது தாய் நாட்டை விடுவிக்க வேண்டுமென்று அன்று ஆண்டு வந்த அரசுகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் செய்து பல இழப்புகளை சந்தித்து ஈற்றில் 1948 ஆம் ஆண்டு அவர்களிடமிருந்து சுதந்திற்றதை பெற்றுக் கொண்டது.

அந்த வீரமிக்க போராட்டங்களை இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களே முன்னெடுத்தார்கள் என்ற போதிலும் அவர்களோடு தோளோடு தோள் நின்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் தங்களது பூரண பங்களிப்புகளோடு பல தியாகங்கள் மத்தியில் வென்றெடுக்கப் பட்ட அந்த சுதந்திரத்தினை பேணிப் பாதுகாக்கும் பக்குவத்தினை அல்லது புரிந்துணர்வோடும் விட்டுக் கொடுப்போடும் சம அந்தஸ்தோடும் தன்னிலும் சிறுபான்மையான மற்றிரு சமூகங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களோடு சமமாக பகிர்ந்து கொள்வதில் பெரும்பான்மை சிங்கள சமூகம் வெற்றி காணவில்லை என்றால் அது மிகையாகாது.

பண்டாரநாயகா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமது தாய் மொழியாக தமிழை பேசி வருகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மீது திணிக்கப்பட்ட தனிச் சிங்கள மொழிச் சட்டத்தோடு ஆரம்பித்த பாகுபாடான சிங்கள தேசியத்தின் அல்லது சிங்கள பெரும்பான்மையின் மேலாதிக்கமானது தனது நாட்டிலேயே வாழுகின்ற தனக்குச் சமமான  சகல அந்தத்ஸ்துகளையும் அனுபவிக்க வேண்டிய சகோதர சமூகங்கள் மீதான  தனது அகோரமான மாற்றாந்தாய் மனப்பாங்கை வெளிப் படுத்தியது. இந்த மனப்பாங்கு அவ்விடததோடு நின்றுவிடாது கல்வி பொருளாதாரம் நிலப்பங்கீடு போன்ற இன்னோரன்ன துறைகளையும் ஊடறுத்துச் சென்றது.

இதனால் விரக்தியடைந்த சிறுபான்மை தமிழ் சமூகம் சிங்கள பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிராக எளுபதுகளில் சாத்வீகப் போராட்டம் என்று தொடங்கி எண்பதுகளில் ஆயுதப் போராட்டமொன்றை மேற்கொள்ள தலைப்பட்டது. அதன் விளைவாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் “ஜூலை கலவரம்” மூண்டது. தமிழ் இனத்தின் சொத்துக்களும் உயிர்களும் மிகப் பரிதாபகரமான முறைகள் அழித்தொழிக்கப் பட்டது. அந்த சூழ்நிலையிலும் கூட சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட அன்றைய அரசின் இராணுவ இயந்திரம் பக்கச் சார்பாக நடந்துகொண்டது என்றும் அந்த கலவரத்தை கட்டுபடுத்த அன்றைய சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்ற குற்றச் சாட்டுகளும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான தமிழ் சமூகத்தின் மீது சர்வதேசத்தினதும் குறிப்பாக அயல் நாடான இந்திய தமிழ் நாட்டினதும் அனுதாபத்தை ஈர்த்தது.

இவ்வாறு ஈர்க்கப்பட்ட சக்திகளின் ஆதரவோடு வலுபெற்ற இந்த தமிழ் இனத்தின் போராட்டம் தமக்கென்று ஒரு தனி இராணுவத்தினை அமைத்துக் கொள்ள வழியமைத்தது. பல தமிழ் இராணுவ போராட்ட அமைப்புகள் தோன்றின. அன்றைய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடாத்தின. செய்வதறியாது திகைத்துப் போன சிங்கள அரசு தன்னை சுதாகரித்துக் கொண்டு தமிழ் இராணுவ அமைப்புகளுக்கு எதிராக தனது தாக்குதலை உக்கிரமிதது. இது வடமராட்சி தாக்குதலோடு தமிழ் தரப்பு  இராணுவத்தை பின்வாங்கச் செய்தது. இலங்கையில் சகோதர தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்ற இந்திய தமிழ் நாட்டு அரசின் அழுத்தங்களும் இந்திய மதிய அரசின் சர்வதேச அரசியல் தந்திரோபாயங்களும் அண்டை நாடான  இலங்கை மீது இந்திய அரசின் அக்கறையை அதிகரித்தது. இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை வான்பரப்பில் இந்திய விமானங்கள் அத்துமீறி பிரவேசித்து பாதிக்கப் பட்ட தமிழ் இனத்துக்கு உணவுப் பொட்டலங்களை போட்டது.

இந்த நிலைமையை கனகட்சிதமாக கையாண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்கள் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை வரவழைத்து 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபைகள் ஆட்சி முறைமை அறிமுகப் படுத்தப் பட்டது மட்டுமல்லாது தற்காலிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு இணைந்த வடகிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஒன்றும் தீர்மானிக்கப் பட்டது. பின்னர் இந்த தற்காலிக இணைப்பு தொடர்பாக கிழக்கு மக்களின் விருப்பு வெறுப்பை அறிய கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப் பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்து இணைந்து இருப்பதா பிரிவதா என்ற முடிவை எடுப்பதாகவும் தீர்மானிக்கப் பட்டது. இலங்கைக்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது.

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்கள் போல யாப்பு ரீதியான சகல சமமான அந்தஸ்துகளையும் உரிமைகளையும் கொண்ட மூன்றாவது தனித் தேசியமான முஸ்லிம்கள் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பொருட்டாக கருதப் படாமை, அதிலும் குறிப்பாக கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிகளின் உணர்வுகள் உள்வாங்கப் படாமல் வடக்கு கிழக்கின் இணைப்பு தற்காலிகமாக மேற்கொள்ளப் பட்டமை போன்ற காரணங்களால் இலங்கை முஸ்லிம் சமூகம் இதுகாலவரை காலமும் கண்டிராத ஒரு ஏமாற்றத்தினை உணரலானது.

அதுவரை காலமும் நீலம் பச்சை என்று சிங்கள பேரினவாத தேசிய கட்சிகளோடு இணைந்து செயற்பட்டுவந்த முஸ்லிம் சமூகம் தனக்கென்று ஒரு தனியான அரசியல் இயக்கம் ஒன்றின் தேவையை வலுவாக உணர்ந்தது. தனது உரிமைகளுக்கும் உயிருக்குமான பாதுகாப்புக்கு ஒரே தீர்வு இந்த நாட்டு முஸ்லிம்கள்  தனியான ஒரு முஸ்லிம் தேசிய அரசியல் இயக்கதின்கீழ் ஒன்றிணைவதுதான் என்று தீர்மானித்தது.அந்த சூழலில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது.

தமிழ் மொழியை தாய் மொழியாக பேசி வந்தாலும் தமக்கென்று தனியான கலாச்சார விழுமியங்களையும் பண்பாடுகளையும் கொண்டிருக்கின்ற உலகளாவிய முஸ்லிம் உம்மாவில் ஒரு அங்கமான முஸ்லிம் சமூகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பூர்வீக குடிகளாக, இலங்கை முஸ்லிம் தேசியத்தின் ஒரு அங்கமாக இருந்தபோதிலும் சிங்கள தமிழ் இனங்களுக்கிடைலான இனபிரச்சினையில் தீர்வு ஒன்று எட்டப் படுகின்ற வேளையில் மிகத்துச்சமாக உதாசீனப் பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முழுதாக புறக்கணிக்கப் பட்டது மட்டுமல்லாது அந்த சமூகத்தின் இருப்பு, உரிமை, பாதுகாப்பு மற்றும் நியாயமான அபிலாசைகள் தொடர்பான கோசங்கள் அக்கறையுடன் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதனால் அதுவரை காலமும்  தாம் நம்பிவந்த நீலம் பச்சை சிங்கள பேரினவாத கட்சிகளின் இரும்புக் கரங்களுக்குள் இன்னும் சிக்கி இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தது.

எதோ ஒருவகையில் கவரப்பட்டு அல்லது நியாயம் காணப்பட்டு சுமார் 800 க்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் தேசியவாத ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களில் சேர்ந்து இயங்கிய அந்த காலப் பகுதியில் அவ்வப்போது தமிழ் முஸ்லிம் இனங்களிடையே மூண்ட இனக்கலவரங்களின் போது தமிழ் தேசியத்தின் இயந்திர துப்பாக்கிகள் முஸ்லிம் தேசியத்தை நோக்கி சுட்டு தீர்த்தும், எப்போதுமே எமது சமூகத்தின் நியாயமான அபிலாசைகளை கருத்தில் எடுக்க தவறுகின்ற தமிழ் தேசியவாத போராட்ட இயக்கங்களின் உதாசீனப் போக்கும் தமிழ் தரப்பு அரசியல் மற்றும் ஆயுதப் போராட்ட சக்திகளை முஸ்லிம் தேசம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைமைக்கு இட்டுச்சென்றது.

அன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்கள் மீதான சிங்கள தேசியத்தின் அலட்சியமும் தமிழ் தேசியத்தின் அச்சுறுத்தல்களும் முஸ்லிம் தேசியத்தை இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு விரக்தியடைய வைத்தது மட்டுமல்லாது இவ்விரு இனங்களும் தன்னிலும் சிறுபான்மையான மூன்றாவது இனத்தின் மீது கொண்டிருந்த மாற்றான்தாய் மனப்பான்மை முஸ்லிம் அறிவுசார் சமூகத்தை ஆழமாக சிந்திக்கவும் தூண்டியது. அதற்கும் மேலாக ஜூலை கலவரத்தின்போது இலங்கை இராணுவம் சிங்கள ராணுவமாக மாறி தமிழ் இனத்தை அழித்தது போன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகமும் சதையுமாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிடையே தமிழ் தரப்பு இராணுவ இயந்திரமானது முஸ்லிம்களை பதம் பார்க்க தொடங்கிய துர்பாக்கிய நிலைமையானது முஸ்லிம் இளைஞர்கள் தற்பாதுகாப்புக்காக ஆயுதக் கலாச்சாரதினை நோக்கி நகரும் மிகவும் ஆபத்தான சந்தர்பமும் உணரப் பட்டது.

அந்த வேளையில்தான் முஸ்லிம் சமூகம் தனித்தேசிய அரசியல் சக்தியை வளர்த்தெடுத்து அதன்மூலம் தனது தனிமனித பாதுகாப்பு, சம உரிமைகள் மற்றும் எமது சமூகத்துக்கு என அடையாளம் காணப்படுகின்ற அபிலாசைகள் போன்ற அடைவுகளை எட்டமுடியும் என்ற சமூக எழுச்சிக்கான கோட்பாட்டோடும் வீரியத்தோடும் மிகத்திறமையான தலைமைத்துவ பண்புகளோடும் ஈடுபாட்டோடும்  அரசியல் போராட்டத்தை முன்வைத்த அன்றைய தலைமை மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களும் அவர்கள் ஸ்தாபித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற கட்சியும் போராடியது என்றால் மிகையாகாது.

இந்த அரசியல் போராட்டத்தோடு அன்றைய இக்கட்டான சூழலில் முஸ்லிம்களின் விமோசனம் வேண்டி கவலைப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் அறிவுசார் சமூகத்தையும், ஆயுதக் கலாச்சார மோகத்தில் மயங்கிக் கிடந்த முஸ்லிம் இளைஞர் சமூகத்தையும் மிகக் கவனமாக தனது கருத்துக்களோடும் அரசியல் போராட்டதோடும் இணைத்துக்கொண்டு இலங்கை முஸ்லிம் தேசியம் ஏகமனதாக அங்கீகரிக்கும் வகையில் அந்த போராட்டத்தை நடாத்திச் சென்றார் அன்றைய தலைவர். மட்டுமல்லாது 1989 ல் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகப் படியான முஸ்லிம்களின் ஆணையைப் பெற்று எதிர் கட்சியாக அமர்ந்ததும் அதனை தொடந்து 1990 ல் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனித் தேசிய முஸ்லிம் கட்சியாக பாராளுமன்றம் சென்றதும் 1996 ல் பொதுத் தேர்தலில் வெற்றி கண்டு சந்திரிக்கா அம்மையாரோடு இணக்கப்பாட்டு அரசியல் மூலம் இலங்கை முஸ்லிம்கள் முடி சூடா மன்னர்களாக பல்வேறு அடைவுகளை எட்டிய முஸ்லிம் அரசியல் தலைமை 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை தான் சார்ந்த அரசு சார்பாக முன்வைத்து “இலங்கை முஸ்லிம்களுக்கான எனது பங்களிப்பு இதோடு முற்றுப் பெறுகின்றது” என்று சொல்லிவிட்டு ஓய்ந்த குரலோடு அடுத்த செப்டெம்பர் மாதம் அரநாயக வானில் அந்த நிலா அஸ்தமிக்கிறது. இன்றுடன் பதுனாறு வருடங்கள்.

அந்த தலைமை மறைந்த மட்டில் அந்த கட்சியின் தலைவர பதவியை நான் ஆசைப் படுகின்றேன் எனது மனம் கேட்கிறது தாருங்கள் என்று வலிந்து கேட்டு பெற்றுக் கொண்ட இன்றைய தலைமை சகோதரர் ரவூப் ஹகீம் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கட்சியை நலிவடையச் செய்தது மட்டுமல்லாது அந்த கட்சியாலும் அன்றைய தலைமை மர்ஹூம் அஷ்ரப் அவர்களாலும் திட்டமிடப்பட் எந்தவொரு அடைவுகளையும் எட்டவுமில்லை அல்லது அதற்கான வாய்புகள் தென்படவுமில்லை என்பது இன்றைய ஒட்டு மொத்த முஸ்லிம் தேசியத்தின் கணிப்பீடு. அதற்கும் மேலாக அண்மைக்கால நகர்வுகளை நோக்கும்போது அந்த தலைமை முஸ்லிம் தேசியத்தை அகல பாதாளத்தில் தள்ளிவிடுமோ என்ற ஐய்யப்பாட்டை  தோற்றுவித்திருக்கின்று. இன்றைய தலைமையால் அதற்கு ஆணை வழங்கிய முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருந்த எண்ணற்ற அடைவுகளில் எதுவுமே எட்டப்படவில்லை என்ற கவலையில் முஸ்லிம் சமூகம் துவண்டு போய் இருப்பது மட்டுமல்லாது இந்த தலைமைக்கு வழங்கப் பட்ட அமானிதத்தை பாதுகாக்க தவறிவிட்டதானது இதனது இயலாமையா அல்லது வாகளித்துவிட்டு  நம்பியிருக்கின்ற சமூகத்துக்கு செய்கின்ற துரோகமா என்ற கேள்விகளே இன்றைய பிரதான கேள்விகள்.

அந்த வரிசையில் இந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் என்றுமே ஏற்கமுடியாத பரிதாபமான ஈனச்செயலான வடக்கு மாகாண முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட இருபத்தாறாவாது வருட பூர்த்தியை ஒட்டி அந்த துர்பாக்கிய நிகழ்வை, விரட்டியடிப்பை, பழிதீர்த்தலை அல்லது இனச்சுத்திகரிப்பை கையாள்வதற்காக இந்த தலைமை என்ன செய்திருக்கிறது என்ற கேள்வி எமது ஒவ்வொர்வர் மனதிலும் எழுகிறது.

புலிகளின் அச்சுறுத்தலை மீறி அன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டதற்கு பழிதீர்ப்பதற்காக அல்லது நிரந்தரமாக முஸ்லிம்களை இந்த மண்ணிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்பதற்காக புலிகளால் 1990 ஏப்ரல் மாதம் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் துண்டு பிரசுரம் மூலம் கிழக்கு மண்ணை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது. கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்ததாலும் இராணுவக் கட்டுப்பாடு பிரதேசங்களில் வாழ்த்திருந்ததாலும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதனை தொடர்ந்து ஒக்டோபர் மாதம் யாழ்பாணம் முல்லைத்தீவு மன்னார் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் நூறாயிரம் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் ஒரே நாளில் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டு இருபத்தாறு வருடங்களையும் தாண்டிய அகதி வாழ்க்கை வாழும் எமது சகோதர வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களினது மீள்குடியேற்றதையும் மன அமைதியையும் கருத்தித் கொண்டு தனக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சைக் கேட்டுப் பெற்றுக் கொண்ட அன்றைய தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அவரது மறைவுக்கு முன்னமாகவே 9,335 பேரை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை ரிஷாத் பதயுதீன் அவர்கள் தானும் தனது பதினெட்டாவது வயதில் அவ்வாறு அகதிகளாக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதனாலும் தனக்கு ஆணை வழங்கிய வடக்கு மாகாண முஸ்லிம்களுக்காக தனது கட்சி செய்ய வேண்டியவற்றை முடிந்தவரை செய்து கொண்டிருக்கின்றார். அது தொடர்பாக வில்பத்து பிரச்சினை தொட்டு பல் மீள்குடியேற்றம் வீடைமைப்பு திட்டங்கள் என்பன தொடர்பாக அவர்களினது பங்களிப்பு பாராட்டப் படவேண்டியது.

ஆனால் துரதிஷ்டவசமாக வடமாகாண முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பாக கடப்பாடுள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அந்த மக்களுக்காக எதனையுமே உருப்படியாக செய்யவில்லை என்பது வெளிப்படையான உண்மையும் கவலையுமாகும். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அன்றைய முஸ்லிம் தனித் தேசிய அரசியல் எழுச்சிக்காக ஆதரவளித்து அதன் நிமிர்த்தம் வஞ்சிக்கப் பட்ட மக்களாகவே வடமாகாண வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களை பார்க்க வேண்டும். உண்மை அவ்வாறு இருந்தும் அந்த மக்களின் பாதிப்புகளின் விபரம், அவர்களை மீள்குடியமர்துவதற்கான உருப்படியான வேலைத்திட்டம், நிகழ்ச்சி நிரல், அணுகுமுறை என்று எதனையுமே கொண்டிராத ஹக்கீம் அவர்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் ஹுசைன் அவர்கள் இலங்கைக்கு வந்த நேரம் துருக்கியில் இருந்தார் என்பது அவரது வடமாகாண அகதிகள் மீதான அலட்சியத்தையே காட்டுகின்றது.

வடமாகாண அகதிகள் பிரச்சினை போன்ற விடையங்களில் வினைத்திறனாக ஒரு “குட்டி அரசாங்கம்” போன்று செயற்பட வேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதனை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சந்திரிகா அம்மையாரோடு இணக்கப்பாட்டு அரசியல் மூலம் செய்து காட்டினார்கள் என்றால் அந்த முறைமையை எட்டியும் பார்க்க முடியாமல் இன்றைய தலைமை ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் தேசியத்தை வலுவிழக்கச் செய்திருக்கின்றார். ஒரு தேசியத்திற்காக முழு அளவிலான வினைத்திறனோடும் ஈடுபாட்டோடும் இயங்க வேண்டிய தலைமை தனக்கு ஆணையை வழங்கி அமானிதத்தை பொறுப்புக் கொடுத்த மக்கள் பணிகள் தொடர்பில் அலட்சியமாக செயற்படுவது அந்த மக்களுக்கும் அவர் சார்ந்த கட்சியை ஸ்தாபித்து பல கனவுகளோடு மறைந்த தலைமை மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும் செய்யும் துரோகமா என்பதே இன்றைய முஸ்லிம் மக்களின் அச்சம்.

இதற்கிடையில் மக்களின் வேலைகள் நிமிர்த்தம் கால நேரம் பாராது நாள் முழுதும் செயற்படுகின்ற, முஸ்லிம் தேசியத்தின் கல்வி, பொருளாதாரம், தொழில்வாய்ப்பு போன்ற இன்னோரன்ன தேவைகளிலும் அபிவிருத்திப் பணிகளிலும் தன்னையும் தனது கட்சிப் போராளிகளையும் முழுமையாக ஈடுபடுத்தி முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்காக பாடுபடுகிற்ற ஒரு “குட்டி அரசு” போன்றே தனது கட்சியையும் அமைச்சையும் வழிநடாதுகின்றார் என்றே இந்த நாட்டு மக்களால் அடையாளம் காணபடுகின்றது.

மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் போன்று தான் சார்ந்த சமூகத்துக்காக தமிழ் தேசியவாத நெருக்குதல்களுக்கும் சிங்கள பேரினவாத கேடுபிடிகளுக்கும் ஈடு கொடுத்து தனது நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்ற இந்த தலைமையை “நிஜப் போராளி” என்றால் அது மிகையாகாது.