விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் அரசியலில் தற்போது வரையில் நான் நேரடியாக தொடர்புபடவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் கவனம் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றேன்.
இருப்பினும் நாட்டின் சகலதுறைகளும் மந்த கதியில் பயணிக்கின்றன என்பதே சகலரதும் கருத்தாக அமைந்துள்ளது. கடந்த அரசாங்கம் பல்வேறு துறைகளுக்கும் வழங்கிய சேவைகள் இன்று முடங்கியுள்ளன.
இது எமது நிலைப்பாடு மாத்திரமல்ல நாட்டு மக்கள் பலர் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இந்த அரசாங்கத்திடம் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான உரிய செயற்றிட்டங்கள் எதுவும் இல்லை.
இல்லாவிட்டால் கடந்த அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்கான திட்டம் மட்டுமே இவர்களிடத்தில் இருந்துள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
எனது துறையை சம்பந்தப்படுத்தி கூறுவதாயின் இன்று பாதுகாப்பு தரப்பிற்குள் பல்வேறு தளம்பல் நிலைமைகள் தோன்றியுள்ளன. அவற்றை சீர் படுத்துவதற்கான எவ்வகையிலான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
பாதுகாப்பு தரப்புக்கள் விடயத்தில் சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கக்கூடிய ஒருவரும் அரசாங்கத்தில் இல்லை. குறிப்பாக வடக்கின் பாதுகாப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து சிறிதும் திருப்தியடைய முடியாதுள்ளது.
பொருளாதாரத்தைப்பற்றி நோக்கும் போது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னதாக சீனாவுடனான பொருளாதார உறவை முறித்துக்கொள்வதையே பிரதான இலக்காக கொண்டிருந்தது.
அதன் பிரகாரம் ஆட்சிக்கு வந்த பின்னர். சீனாவுடனான பொருளாதார செயற்பாடுகள் பலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அதன் பலன்களையும் இன்று அரசாங்கம் அனுபவித்துக் கொண்டுள்ளது.
தூரநோக்கற்ற செயற்பாடுகளே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகியுள்ளன. கொழும்பு, காலி, கண்டி ஆகிய மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய நாம் திட்டங்களை வகுத்து அதற்கான கடனை உலக வங்கியிடத்தில் பெற்றுக்கொண்டு வேலை திட்டங்களையும் ஆரம்பித்திருந்தோம்.
ஆனால் அவற்றை நிறைவு செய்யும் முன்னர் ஆட்சி மாறிவிட்டது. இது ஐந்து வருட திட்டம். அதனை 3 வருடத்தில் நிறைவு செய்யவே நாம் திட்டமிட்டோம். அதற்கமைவாக வேகமாக குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.
அவற்றை நிறைவு செய்ய இன்று இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமும் இருக்கின்றது. ஆனால், திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
அத்துடன் முப்படையின் முக்கியஸ்தர்களையும் இராணுவ வீரர்களையும் அடிக்கடி விசாரணை என்ற பேரில் அழைத்து அலைக்கழிப்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல. எந்த விடயத்திலும் ஒரு நீதியான படிமுறை இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.