முஸ்லிம்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் காணிச் சட்டங்களுக்கமையவே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே உண்மையை அறிய எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மையின சில ஊடகங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதத்தை பரப்புவதை கைவிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
வில்பத்து தேசிய வனப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக வில்பத்து பகுதிக்கு தெற்கிலிருந்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் சனிக்கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்போது மறிச்சுக்கட்டி பள்ளிவாசலில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு குழுமியிருந்த பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் காரசாரமான கேள்விகளுக்கு அமைச்சர் ரிஷாட் மேலும் பதிலளிக்கையில்
யுத்தம் முடிந்த பின்னர் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி உட்பட பல கிராமங்களில் வாழ்ந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வேறு எவரும் அங்கு குடியேற்றப்படவில்லை. பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் ஆராயப்பட்டு காணிக் கச்சேரி நடத்தப்பட்டு இக்கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்து 1990 களில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை வில்பத்து தேசிய வனப்பகுதியில் மக்கள் குடியேற்றப்படவில்லை. வனத்தை நாங்களும் மதிக்கின்றோம். சூழலை பாதுகாப்பது எமது கடமை.
வில்பத்து காட்டில் ஒரு அங்குலமேனும் அழிக்கப்படவில்லை. 1990களில் மக்கள் வாழ்ந்த இடங்கள் பற்றைக் காணிகளாக மாறியிருந்தன. அவை துப்புரவு செய்யப்பட்டே குடியேற்றம் முன்னெடுக்கப்படுகிறது.
இவ் பிரதேசங்களில் 3க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருந்தன. அவை புலிகளால் சேதமாக்கப்பட்டன. இன்று அவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதோடு புதிய பள்ளிவாசல்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் மக்கள் வாழ்ந்த காணிகளிலேயே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர வில்பத்து காடு அழிக்கப்பட்டு அங்கு இவையனைத்தும் மேற்கொள்ளப்படுவதாக வெளியிடப்படும் செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை.
இலங்கையின் காணிச் சட்டங்களுக்கமைய காணி கச்சேரிகள் நடத்தப்பட்டு பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் 1990க்கு முன்பதான வாக்காளர் இடாப்பு பரிசீலிக்கப்பட்டு சட்ட ரீதியாக மக்களுக்கு 1/2 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டத்தை மீறி இங்கு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எவருக்காவது சந்தேகம் இருந்தால் நீதிமன்றம் சென்று உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
அதை விடுத்து முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் குழுவொன்று நியமித்து உண்மைகளை கண்டறியுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் போது இங்கு ஏராளமான ஊர் மக்கள் கூடியிருந்தனர். ஊடகவியலாளர் மாநாடும் சூடு பிடித்தது.
மக்கள் வாழ்ந்த 1000 ஏக்கர்களுக்கு மேலான காணிகளை கடற்படையினர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே அதற்கு பதிலாக மாற்றுக் காணிகளிலும் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஆனால் வில்பத்து காட்டில் கொண்டு போய் மக்களை குடியேற்றவில்லையென்றும் அமைச்சர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.