பிடிவாதமும், அகம்பாவமும் வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை : அமைச்சர் றிசாத்

 

சுஐப் எம்.காசிம்  

 

அடுத்தவர்களுக்கு உதவும்போது  இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி செயற்படுங்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டி “ மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன்” புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விழாவில் விஷேட அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை பங்கேற்றிருந்தார். கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பொறியியலாளர் ஜவ்பர்,   டாக்டர் சனீக் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வடமாகாண மஜ்லிசுஸ் சூராவின் தலைவர், மௌலவி அஷ்ரப் முபாரக் அல்ரஷாதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் கூறியதாவது,

மிகநீண்ட காலத்துக்குப் பின்னர் நாம் இந்த பிரதேசங்களுக்கு வந்து குடியேறத் தொடங்கியுள்ளோம். இங்கு நாம் வந்தபோது தமிழ் மக்கள் எம்மை அரவணைத்து, அன்பு பாராட்டினார்கள். இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியில் எமது குடியிருப்புக்கள் அடையாளம் தெரியாது, உருக்குலைந்து கிடந்தன. அந்த வகையில் பல பள்ளிவாசல்களும் தகர்ந்திருந்தன. இந்தப் பள்ளிவாசல்களை மீளக்கட்டியெழுப்புமாறு தமிழ் மக்கள் பலர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தமையை, நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னர், நாம் உயிலங்குளத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டச் சென்றிருந்தோம். அந்த விழாவில் அதிகமான தமிழர்களைக் கண்டபோது, நான் உண்மையிலேயே நெகிழ்ந்து விட்டேன். 

அதேபோன்று பள்ளிவாசல்பிட்டி, பள்ளித் திறப்புவிழாவில் பேராயர் உட்பட ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் இந்து, கிறிஸ்தவ மக்கள் வருகை தந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது.

மன்னாரில் தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தலைத்தோங்கி வருவதற்கு, இஸ்லாமியர்களின் சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளில், ஏனைய இனங்களைச் சார்ந்தோர் கலந்துகொள்வது தக்க சான்றாகும். 

மீண்டும் வேர்விட்டு வரும் இந்த இனிய உறவுகளை சீர்குலைக்கும் முயற்சிகளில் எந்த சமூகத்தவர் ஈடுபட்டாலும், அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். இந்தத் தீய சக்திகளின் சதிகார வலைக்குள் அநியாயமாக சிக்கிக் கொள்ளாதீர்கள். 

முஸ்லிம்களாகிய நாம் பெருமானார் காட்டித் தந்த வழிமுறைகளையும், நபித் தோழர்களின் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நம்மிடையே நல்ல பண்புகள் குறையும்போது, புரிந்துணர்வுத் தன்மையும் இல்லாமல் போகின்றது.

சின்னச் சின்ன பிரச்சினைகள் பெரிதாவதற்கு இதுவே காரணம். பிடிவாதமும், அகம்பாவமும் வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை. விட்டுக்கொடுப்பு என்னும் உயரிய தன்மையை நாம் கடைபிடித்தால், அமைதியான வாழ்க்கையை நடாத்த முடியும்.

இந்த விழாவில் பேராயர் சமூக ஒற்றுமையைப் பற்றி அழகாக பேசினார். முஸ்லிம் சமூகம் சார்பில் அவருக்கு நான் நன்றி பகர்கின்றேன்.

யுத்த காலத்திலேயே மிகவும் மோசமாகக் கிடந்த இந்தப் பள்ளிவாசல்பிட்டி கிராமத்திலே, ஓர் அழகான பள்ளியை நிர்மாணிக்கப் பாடுபட்ட மௌலவி முபாரக் அவர்களுக்கும், பள்ளி நிர்மாணத்துக்கு உதவிய வெளிநாட்டுப் பரோபகாரிகளுக்கும், இந்த ஊர் ஜமாஅத்தினருக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இந்த விழாவிற்கு இந்து, கிறிஸ்தவ மதப் பெரியார்களையும், அரசியல்வாதிகளையும், மாற்றுச் சகோதர மக்களையும் வரவழைத்து,  இந்த நிகழ்வை மிகவும் வெற்றிகரமாக மௌலவி முபாரக் அவர்கள் நடத்தியுள்ளார். புத்தளத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆரம்பித்த மதரசா ஒன்றையும், அவர் திறம்பட நடாத்தி வருகின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.